பெருந்தோட்டங்களின் EPF, ETF பிரச்சினைகளுக்கு நிதியை ஒதுக்கி தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

0
34

”இந்தத் தேர்தல் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் நடக்கின்ற தேர்தல். பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நடக்கின்ற தேர்தல். அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு தலைவர் என்றால் அது எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மாத்திரமே. அவர் எடுத்த முயற்சியால்தான் இன்று நாடு படிப்படியாக பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்றது. இனிமேல் அனைத்தையும் செய்வேன் என்று மக்களை கவர்வதற்காக மேடையில் யாருக்கும் கதைக்கலாம். ஆனால் நெருக்கடியின் போது யாரும் முன்வரவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (15) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்போது அமுல்படுத்த முடியாத விடயங்களை அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். யாருக்கும் எதையும் கதைக்கலாம். ஆனால் செயல்வீரன் ஒருவன் மாத்திரமே இருக்கிறார். அவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவரால் தான் நாட்டை மீட்டெடுக்க முடியும். பெருந்தோட்டங்களின் EPF, ETF தொடர்பான பிரச்சினைகளுக்கு நிதியை ஒதுக்கி தீர்வு காணவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அது மாத்திரமன்றி கல்வி, காணிப் பிரச்சினை,வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக இதுவரை இருந்த சிக்கல்களைத் தீர்க்க கடந்த இரண்டு வருடங்களாக அவர் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த தேர்தலில் நீங்கள் ஒரு கட்சி சார்ந்த ஒரு தனி நபருக்கு வாக்களிப்பதாக அமையாது. மாறாக அது இந்த நாட்டின் வெற்றிக்காக அளிக்கப்படும் வாக்குகளே என்பதைக் கூறிக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்வது எமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here