மலையக வரலாற்றில் பெருந்தோட்டச் சேவையாளர்கள் இலங்கை சுதந்திரத்திற்கு பின்னதாக இந்த நாட்டில் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. ஆனால் அவர்களது சகல நலன்களிலும் குறிப்பாக வீட்டு வசதிகள் போன்ற பல்வேறு அபிலாஷைகள் பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதில் கவலையளிப்பதாக பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பெருந்தோட்ட சேவையாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் தோட்ட தொழிலாளர்களோடு, இணைந்து சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளே. அதே தோட்டங்களில் சேவையாளர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படியிருந்தும் இவர்களது அபிலாஷைகளில் அரசு எவ்விதத்தில் பின் நிற்க கூடாது. இன்று பல்லாயிரக் கணக்கில் தோட்ட சேவையாளர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு சொந்தக் குடியிருப்புக்கள் இன்றி மிக அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 2017ம் ஆண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்கவுடன் நேரடியாக சந்தித்து இது தொடர்பில் பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் விபரித்தார். எனினும் அமைச்சர் நவின் திசநாயக்க அமைச்சரவையில் இதையிட்டு நடவடிக்கை எடுப்பவதாகக் கூறியும், இதுவரையிலும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. தோட்ட சேவையாளர்கள் நாளுக்கு நாள் தமது அதிதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை மேலும் நீடிக்க கூடாது என்பதற்காக இதற்கான ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உடன் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் போவதாக சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.