பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் தொழில் அமைச்சிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவிற்கு ஏற்ப அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட்டமை போன்று, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும் என இதன்போது முன்மொழியப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களை போன்று கூட்டு ஒப்பந்தத்தில் மீளவும் கைச்சாத்திட்டு, நலன்புரி வேலைத்திட்டங்களும் உள்வாங்கப்பட்டு வேதனத்தை உயர்த்துவதா? அல்லது வேதன நிர்ணய சபையின் ஊடாக வேதனத்தை அதிகரிப்பதா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இதன்படி, 18 பேர் கொண்ட இந்த குழுவுக்கு தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றை சேர்ந்த தலா 6 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன விடயத்தில், புதியதொரு பொறிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் அந்த குழுவின் அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.