மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தையும், அவிசாவளை உள்வரும் ஹோமாகமை கல்வி வலயத்தையும் சார்ந்த பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு தோட்டங்களை சாராத சகோதர இனத்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது சரியானதல்ல என இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் வாதிட்டதாவது,
கடந்த கால வரலாறுகள் எடுத்து பார்க்கும் போது, இப்படி நியமனம் பெருகின்ற சகோதர இனத்து ஆசிரியர்கள், நியமன விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று சென்று விடுகிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் பணி புரியாததால், இந்த பாடசாலைகளின் கல்வித்தரம் குன்றுகிறது.
இது ஒரு பின்தங்கிய சமுகத்துக்கு காட்டப்படும் அநீதியாகும்.
மேலும் ஆசிரிய நியமனங்களுக்காக நடத்தப்படும் பரீட்சைகளும், நேர்முக தேர்வுகளும் இன்னமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும்.
நியமிக்கப்படும் ஆசிரியர்களை தெரிவு செய்யப்படுவதற்காக, நடத்தப்படும் இந்த பரீட்சைகள், நேர்முக தேர்வுகள் தொடர்பாக எனக்கு பெரும் சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
இளம் மலையக தமிழ் மாணவர்களது, மொழி, இன கலாச்சாரத்துக்கு உகந்தவர்களையே தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
மாகாணசபைகளால் பட்டதாரிகளுக்கே ஆசிரிய நியமனம் வழங்க முடியும். கடந்த காலங்களில் போல் அல்லாமல் இன்று மலையக பகுதிகளில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதையும் இவர்களை தோட்ட பாடசாலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட முடியும் எனவும் அமைச்சர் மனோ ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
தோட்டப்புற பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகள் மற்றும் இவர்களது பெற்றோர் சமூக, பொருளாதார மட்டங்களில் தேசிய மட்டங்களை விட பின் தங்கி இருக்கின்ற காரணத்தால் இந்த விசேட சலுகை ஒதுக்கீடு பொறிமுறை அவசியமாகிறது.
இவற்றை செவிமடுத்த ஜனாதிபதி தோட்ட பாடசாலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக, “பின்தங்கிய பிரிவினருக்கான பொறிமுறை” என்ற அடிப்படையில் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கும்படி அமைச்சர் மனோவிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான ஒரு அவசர சந்திப்புக்காக மலையக கல்வியியலாளர்கள் பேராசிரியர்கள் சந்திரசேகரன், தனராஜ் மற்றும் சிந்தனையாளர் வாமதேவன் ஆகியோரை தனது அமைச்சுக்கு இன்று அழைத்துள்ளதாகவும், தான் அமைச்சரவையில் சமர்பிக்க உத்தேசித்துள்ள பத்திரம் அவிசாவளை, களுத்துறை மட்டுமல்லாமல் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாண தோட்டப்புற பாடசாலைகளுக்கும் பொருந்தும் விதமாக அமையும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.