கலேவலை, பெலியகந்த பிரதேசத்தில் சிறிய வீடொன்றில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒன்றரை வயது மற்றும் நான்கு வயதுடைய இரண்டு பிள்ளைகள் கலேவலை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த பிள்ளைகளின் தாய் பிள்ளைகளை தனிமையில் கைவிட்டு விட்டு தலைமறைவாகியுள்ளாகவும் பிள்ளைகளின் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்பதால் அவர் பிள்ளைகளை கண்டுகொள்வதில்லை என்றும் பொலிஸாருக்கு தெரிய வந்ததையடுத்து இரண்டு பிள்ளைகளும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 05 நாட்களாக இந்த இரண்டு பிள்ளைகளும் பெற்றோர் இன்றி தனியே வீட்டில் இருந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் உணவு வழங்கி பிள்ளைகளை பாதுகாத்து வந்துள்ள நிலையில் கலேவலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒன்றரை வயது ஆண் குழந்தை மற்றும் நான்கு வயதுடைய பெண் சிறுமி ஆகிய இருவரையும் கலேவலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை மீட்டு உணவளித்து பராமரித்து வருகின்றனர்.
தந்தை இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு பிள்ளைகளையும் தனிமையில் விட்டு விட்டு வேறு பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ள தாயை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.