குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ், தங்களின் பெற்றோர் மற்றும் பேரன் பேத்திகளை நிரந்தர வசிப்பிட உரிமையுடன் (Permanent Residents) கனடாவுக்கு அழைத்து வருவதற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்துவதாக கூட்டாட்சி அரசாங்கம் அறிவித்துள்ளது.
குடிவரவு முறையை பொறுப்புடன் நிர்வகிக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Ottawa தெரிவித்தது.
தற்போது ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதோடு, இதற்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்களாகவும், Quebec மாகாணத்தில் 66 மாதங்களாகவும் உள்ளது.
இந்த தற்காலிக நிறுத்தம் இருந்தாலும், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் குடிவரவு திட்டத்தின் கீழ் 15,000 பேருக்கு நிரந்தர வசிப்பிட உரிமை வழங்குவதில் எவ்வித மாற்றமும் இருக்காது என குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கனடாவில் குடிவரவு என்பது அரசியல் ரீதியாக விவாதிக்கப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது.
பிரதமர் Mark Carney மற்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Lena Diab தலைமையிலான அரசாங்கம், குடிவரவு முறையை சீரமைக்கவும், புகலிடக் கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
புதிய விண்ணப்பங்களுக்கான இந்த தடை மறுஅறிவித்தல் வரை நீடிக்கும் என்றாலும், பெற்றோர் மற்றும் பேரன் பேத்திகள் தற்காலிகமாக தங்குவதற்கு ‘Super Visa’ மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



