பொசன் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித தலத்திற்கு செல்வதற்காகவே இந்த ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலியிலிருந்து வவுனியா நோக்கி செல்லும் ரஜரட்ட புகையிரதத்தின் இரண்டாம் வகுப்புக்கான மேலதிக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும், கொழும்பு கோட்டையிலிருந்து வவுனியா வரை செல்லும் புகையிரதத்திலும் மேலதிக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை செல்லும் புகையிரதத்திலும் மேலதிகமாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பொசன் காலத்தை முன்னிட்டு அனுராதபுரம் நோக்கி அதிகமானோர் செல்வதாலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.