அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலுக்கு பின்னர் ஈரான் தலைவர் காமேனி முதன்முறையாக பொது வெளியில் தோன்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தெஹ்ரானில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டுக்கு அருகே பள்ளிவாசல் ஒன்றிற்குள் நுழைந்து அவர் அமரும் காட்சியை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைப்பதோடு கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடி செல்லும் காட்சிகளே வெளியாகி உள்ளது. இதன்போது அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர். எனினும், அவர் பொதுமக்களுக்கு அறிக்கை விட்டது பற்றியோ வேறு எந்தவித தகவலோ வெளிவரவில்லை.
காமேனி எந்த பகுதியில் இருக்கிறார் என்ற விவரம் எங்களுக்கு தெரியும். ஆனால், அவரை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அப்போது சமூக வலைத்தளம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் கடந்த ஜூன் 13 திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது.
இதனையடுத்து ஈரான் பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது.
எனினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 12 நாட்கள் போர் இடம்பெற்ற நிலையில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையில் அது முடிவுக்கு வந்தது. போரின்போது காமேனி பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட்டார். பதுங்கு குழியில் அவர் தங்கி விட்டார் என தகவல்கள் பரவின.இந்நிலையில் அவர் தற்போது பொது வெளியில் வரும் காட்சியை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.