பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்காக எமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது எமது பிரச்சனைக்கான தீர்வு அல்ல. ஆகக்குறைந்தது பொருளாதார பிரச்சினைக்கான தீர்வும் அல்ல. ஏனென்றால் சர்வதேச நாணய நிதி என்பது கட்டாயமாக தாம் வழங்கும் கடனுக்கு பின்னால் ஒரு பெரிய பொதியை சுமக்க அனுப்பி வைக்கும். அதாவது இந்த நாட்டில் வழங்கப்படும் கடனை மீண்டும் பெற்று எடுப்பதற்காக எவ்வகையான துறைகளில் அதாவது எமது செலவைக்குறைத்து வருமானத்தை எவ்வாறெல்லாம் அதிகரிக்கலாமோ அதுதான் முதலாளித்துவக்கொள்கை. உச்ச இலாபத்தை அனுபவிக்கக்கூடிய வகையான விடயங்களை அது எங்களுக்கு அனுப்பும். அதாவது அவ்வகையான ஒப்பந்தத்தில் நாம் கைச்சாத்திட்டால் மட்டுமே எமக்கு இந்த கடன் கிடைக்கும். எனவே நாம் இந்த கடனை எமது பொருளாதார தீர்வாக பார்க்க முடியாது. அவ்வாறு இதை எடுக்கபோனாலும் வேறு வழியின்றி இந்த சர்வதேச நாணய நிதியை நாம் முழுமையாக எதிர்த்தாலும் அதை எடுக்கப்போகுபவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
குறிப்பாக இவர்கள் முன்வைக்கப்போகும் வரிக்கொள்கை அதாவது நேரடி வரி தனவந்தர்களுக்கு வசதி படைத்தவர்களுக்கான வரி இவர்கள் கட்டாயம் அந்த வரியை அறவிட வேண்டும். நாம் எமது கொள்கையில் அதனை கொண்டுவர வேண்டும். அதாவது இன்று எமக்கு தெரியும் சர்வதேச கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்து ஒரு சதம் வரியும் செலுத்தாது அவர்கள் உச்ச இலாபத்தை எடுத்துக்கொண்டு செல்கின்றார்கள். அவ்வகையான கம்பனிகளுக்கு வரி செலுத்த வேண்டும். எமது பாமர வறிய தொழிலாளர்களுக்கு அவர்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஏற்றுவதன் மூலம் மறைமுக வரியை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல இன்று எமக்கு தெரியும் எமது கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்கள் அரச மயப்படுத்தப்பட்டுள்ளன.
நிச்சயமாக இவை போன்ற அரச மயப்படுத்தப்பட்ட சேவைகள் தனியார் மயப்படுத்தப்படும். எதிர்காலத்தில் நாம் இவைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வகையாக பல்வேறு இந்த சர்வதேச நாணய நிதிக்கு பின்னால் பல்வேறு சுமைகள் எமது தொழிலாளர்களை தாக்கவுள்ளன.என இலங்கை செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி மேதின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
இலங்கை செங்கொடி சங்கத்தின் மேதின நிகழ்வும் வருடாந்த மகா நாடும் இன்று (01) திகதி மஸ்கெலியாவில் நடைபெற்றது அதில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பொருளாதார ரீதியாக நாம் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றோம். பொருளாதாரம் மட்டுமல்ல அரசியல், சமுக தாக்கங்களும் எமக்கு ஏற்பட்டுள்ளன. இனிமேல் இலங்கையை ஆட்சி செய்பவர்கள் எவரானாலும் இனவாதத்தை பயன்படுத்தி ஆட்சி செய்ய முடியாது. அதேபோல் அரசுக்கு வருபவர்கள் யாரென்றாலும் எந்தவித ஊழல் மோசடிக்கு உட்பட்டவர்கள் வரமுடியாது. அவ்வகையான சூழலை இங்குள்ள இளைஞர்கள் குறிப்பாக இளைஞர்கள், பெரும்பான்மையினத்தினர் மட்டுமல்ல அவர்களோடு சேர்ந்து சிறுபான்மையினத்தினர் அதாவது தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து தொடர் போராட்டமொன்று செய்து கொண்டு வருகின்றார்கள். இதுவொரு ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை.
இலங்கையில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த தொழிலாளர்களுக்கு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த தொழிலாளர்களின் உரிமைகள் பல்வேறாக மீறப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஆட்சிமுறையில் எமது தொழிலாளர்கள் சார்ந்த தீர்மானம் எடுக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வரக்கூடிய ஒரு ஆட்சி முறையை அமைக்க வேண்டும். அதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது செங்கொடி சங்கத்தின் |வேண்டுகோளாகும்.
எனவே இந்த மே தினத்தில் நாம் குறிப்பாக கூறுவது எந்தவொரு முறையான துறையோ அல்லது முறைசாரா துறையோ என்று இருக்கக்கூடாது. தொழிலாளர்கள் தலையிட்டு தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் சகல துறைகளும் சட்ட ரீதிக்குள் உட்படுத்தப்பட வேண்டும் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் முறைசாரா துறை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் இதுவே எமது செங்கொடி சங்கத்தின் வேண்டுகோளாகும்.
இந்நிகழ்வில் செங்கொடி சங்கத்தின் தலைவர் சிவசுந்தரம் செல்லையா,பொதுச் செயலாளர் ஆனந்தி சிவசுந்தரம்,பொருளாளர் விசுவாசம் இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.