பொருளாதார மையம் தொடர்பில் பொது கருத்து வடக்கில் ஏற்பட வேண்டும்! : அமைச்சர் மனோ கணேசன்

0
163

வடமாகாணத்துக்கு என ஒதுக்கப்பட்ட இருநூறு கோடி ரூபா பெறுமதிமிக்க பொருளாதார மையம், வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட முயற்சி எடுக்கப்படுமானால், அதை தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.

அமைச்சரவையில் எல்லா அமைச்சுகள் தொடர்பாகவும் அனைத்து அமைச்சர்களுக்கும் கூட்டு பொறுப்பு இருக்கின்றது. இடம் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட முன் ஏன் இது தொடர்பில் அமைச்சவை பத்திரம் கொண்டு வந்தீர்கள் என நான் துறைசார் அமைச்சர் பி. ஹரிசனிடம் கேட்டேன்.

இந்த பிரச்சினை கிளறப்பட்டு ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டும் என்பதற்காகவே, கடந்த அமைச்சரவையில் தான் இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்ததாகவும், இந்த வேளையில் இந்த அமைச்சரவை பத்திரத்தை ஏன் கொண்டு வந்தீர்கள் என பிரதமரும் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும், அமைச்சர் பி. ஹரிசன் என்னிடம் கூறியுள்ளார்.

எனவே வடமாகாணத்து உழைப்பாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட உள்ள இந்த பொருளாதார மையத்தை, வேறு இடங்களுக்கு எவரும் காவிக்கொண்டு செல்லும் முயற்சி அமைச்சரவையில் எடுக்கப்படுமானால் அதை நானும், அமைச்சர் திகாம்பரமும் அமைச்சரவையில் அனுமதிக்க மாட்டோம்.

வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக இருக்கின்றது.

இத்தகைய ஒரு சூழலைத்தான் வெளியில் இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்போது இந்த நிதியாண்டின் ஆறாவது மாதம் நடக்கின்றது.

எனவே இனியும் இதை தாமதிப்பது உசிதமானது அல்ல. வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடமாகாண முதல்வர், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

வடக்கில் இந்த பொருளாதார மையம் விரைவில் உருவாக வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். கொடிய யுத்தத்தின் மூலம் சொல்லொணா துன்பங்களை சந்தித்த வடமாகாண விவசாய உடன்பிறப்புகள், மீண்டும் வளம்பெற, தம் விளைபயிர்களை தேசியரீதியாக விற்பனை செய்ய, உழவர் சந்தையாக கருதப்படக்கூடிய, இந்த பொருளாதார மையம் பெரும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே வட மாகாணத்து அரசியல் தலைமை மத்தியில் இது தொடர்பில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அதுவும் விரைவில் உருவாக வேண்டும். ஓமந்தை, தாண்டிக்குளம், வவுனியா நகரம் என்ற ஏதாவது ஒரு இடம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலைத்தான் வெளியில் இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்த மையம் ஓமந்தையில் அமைவதையே தான் விரும்புவதாகவும், ஆனால் இந்த விஷயம் இழுத்தடிக்கபட்டால், இம்மையம் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே வடமாகாணசபை உறுப்பினர்கள் வேறு ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டார்கள் என முதலமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். ஆனால், கூட்டமைப்பு எம்பீக்கள் சிலரும் மாற்று கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள் என நான் முதல்வரிடம் அமைச்சரவையின் போதே கூறினேன். அதை தான் அறிந்து இருக்கவில்லை என அவர் என்னிடம் கூறினார்.

வடமாகாணத்துக்கு பொருத்து வீடுகள் பொருத்தமானவை அல்ல என முதல்வர் ஆரம்பத்திலேயே கூறினார். அதை அப்போது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சிலர் பொருத்து வீட்டு திட்டத்தை நியாயப்படுத்த முயன்றார்கள். ஆனால், இன்று முதல்வரின் கருத்து ஜனாதிபதியாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே முதல்வரின் கருத்துக்கு உரிய அவதானத்தை தந்து, உரிய முடிவு கூடிய விரைவில் எடுக்கப்படவேண்டும். அடுத்த அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறும்.

பிரதமரும், வடமாகாண முதலமைச்சரும் இதுபற்றி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதுவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

எனவே இம்மாத இறுதிக்குள் முடிவை எடுத்து, பிரதமருடன் கலந்து ஆலோசிப்பது முறையானது என நான் நினைக்கின்றேன். பொருத்து வீடுகள் பொறுத்தமானவை அல்ல எனும்போது, அதை கைவிட்டு விட்டு மாற்று கல்வீட்டு திட்டம் நடைமுறையாக வேண்டும்.

மாறாக ஒட்டு மொத்த வீட்டு திட்டத்தையே கிடப்பில் போட்டு விட முடியாது. அதேபோல், இந்த உழவர் சந்தை பொருளாதார மையமும் ஏதோ ஒருவகையில் நடைமுறையாக வேண்டும்.

வடமாகாணத்து தமிழ் மக்கள் மீது எப்போதும் அக்கறை கொண்டவன் என்ற முறையில் இதை நான் கூறி வைக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here