மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குட்பட்ட நாவலப்பிட்டி , கலபொடவத்த தோட்டத்தின் உதவி கள அதிகாரி ஒருவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, குறித்த தோட்டத்தின் ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் புதன்கிழமை (11) காலை வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதியன்று தோட்டத்திற்குச் சொந்தமான காணியில் இருந்து ஒரு மரத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தையடுத்து குறித்த இளைஞன் மரத்தை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியால் அதிகாரியை தாக்கியுள்ளதுடன் இதில் காயமடைந்த அதிகாரியை, தோட்ட முகாமையாளரான சம்பத் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும், தோட்டத்தில் பணிபுரியும் போது உயிர் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் வழங்கும் வரை இந்த தொழில்முறை நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் இலங்கை தோட்ட சேவைகள் சங்கத்தின் துணைத் தலைவர் ரோஹன தெரிவித்துள்ளார்.