அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘போதைக்கு முற்றுப்புள்ளி’ எனும் திட்டத்தை, செயற்பாட்டுத் திட்டம் ஒன்றின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இலங்கை மது ஒழிப்பு சபையின் 104ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில்,
”அண்மையில் நான் பாடசாலை ஒன்றிற்கு சென்றிருந்தபோது, இலங்கையில் சிகரட் மற்றும் மதுபானத்திற்கு வழங்கப்படும் அனுமதி பத்திரத்தை இரத்து செய்துவிட்டால், பிரச்சினை முடிவடைந்துவிடும் என நான் பாடசாலைக்கு சென்றிருந்தபோது ஒரு மாணவன் கேட்டார்.
அவ்வாறு செய்யமுடியுமாக இருந்தால் மிகவும் சிறந்தது. ஆனால் அவ்வாறு தடைசெய்தால், அவற்றை பயன்படுத்துபவர்களால் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு பாரதூரமான விடயமாக அமைந்துவிடும் என நான் அந்த மாணவனிடம் குறிப்பிட்டேன். சிகரட் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாக காணப்படுகின்றமையே இதற்குக் காரணம்.
மதுபானம் மற்றும் சிகரட் மூலம் கிடைக்கும் வருமானமின்றி திறைசேரியை நடத்திச் செல்ல முடியாதென அதன் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறுவார்களாயின், அந்த கொள்கைக்கு நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அதன் காரணமாகவே நான் சிகரட்டுக்களுக்கான வரியை கூட்டி, மருந்துப் பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு நான் அமைச்சரவைக்கு கூறினேன். இந்த நடைமுறையின் பிரகாரமே நாம் இப்போது செயற்பட்டு வருகின்றோம்” என்றார்.
இதன்போது, போதை ஒழிப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.