இலங்கை மக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது
அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை காசுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை இலக்காக கொண்டு இலவச அரிசி நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கமைய, நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.