தரக்குறைவான மருந்து கொடுக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுகாதார அமைச்சரையும், அமைச்சின் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக விமர்சித்து தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடந்தாலும் தரம் குறைந்த மருந்து மாபியா மற்றும் தரக்குறைவான மருந்துகளை நாட்டு கொண்டு வந்து மக்களை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்வோருக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தரம்குறைந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) விடுத்தே மேற்கண்டவாறு கூறினார்.
”கொள்முதல் மற்றும் பதிவுமுறையற்ற, தரம் குறைந்த ஐ.ஏ.வி.ஐ.என்ற மருந்துப்பொருட்கள் சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இந்நாட்டில் பல நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக நரம்புக்குள் செலுத்தப்படும் ஒரு மருந்து மற்றும் பிரதானமாக நரம்பியல் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலதிகமாக இம்மருந்து மூட்டுகள் மற்றும் இதய நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை தொடர்புடைய வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மருந்துகள் கிடைக்காவிட்டால் சில நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. Myasthenia Gravis எனும் நோய் தீவிரமடையும் போதும் இந்த மருந்தே பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த தரக்குறைவான மருந்து கொடுக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் தலைமையிலான அரசாங்கத்தின் பதில் என்னவாக இருக்கிறது என கேள்வி எழுப்புகிறேன்.
அரசாங்கம் நட்பு வட்டார முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தி அரசியல் சூதாட்டங்களை நடத்தி தேர்தலை நிறுத்தும் அரசியல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். ஊழல் மிக்க சுகாதார அமைச்சரை இப்போதே ஜனாதிபதிக்கு நீக்க முடியும் என்றாலும்,ஜனாதிபதி அதை செய்யமாட்டார்.
அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி மருந்துப்பொருள் கடத்தல் மூலம் நாட்டுக்கு பெருமளவு பணத்தை இழக்கடிப்பதாகவும், இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவதை விடுத்து இதற்குக் காரணமான சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.