மக்கள் பிரதிநிதிகள் என்போர் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரம் மக்கள் சேவை என்று கருதாமல் மக்களின் ஏனைய தேவைகளை இனங்கண்டு உணர்வு பூர்வமாக சேவை செய்வதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி என்பனவற்றின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , நிழல் உறுப்பினர்கள் , அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் ஆகியோருக்காக நுவரெலியா இலங்கை சுற்றுலா சபை விருந்தகத்தில் இடம் பெற்ற தலைமைத்துவ பயிற்சி செயலமர்வில் இணைப்பாளராக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான வி.புத்திரசிகாமணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தச்செயலமர்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் வளவாளராக கலந்து கொண்டார்.
சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் :
அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை நாம் மக்கள் பிரதிநிதிகள் என்றழைக்கின்றோம் .அத்துடன் கட்சிகளின் அமைப்பாளர்கள் , இணைப்பாளர்களையும் நாம் அரசியல் செயற்பாட்டாளர்கள் என்கின்றோம்.
இவர்களிடத்தில் காணப்படுகின்ற தலைமைத்துவ பண்புகள் ஊடாகவே இவர்கள் குறித்து மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள முடியும். அறிவு ,அனுபவம் , மற்றவர்களை மதிக்கும் எண்ணம் போன்றனவற்றை சரியான முறையில் கட்டியெழுப்பப்படுகின்ற போதே ஆளுமையுள்ள மக்கள் பிரதிநிதிகளாக நாம் இனங்காணப்படுகின்றோம்.
எமக்கு ஒதுக்கப்படுகின்ற குறைந்த பட்ச பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலமாக மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. எனினும் நாம் செய்கின்ற சிறிய அபிவிருத்தி திட்டமென்றாலும் அதனை மக்களிடத்தில் உரிய வகையில் கொண்டுச் செல்ல வேண்டும்.
மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றை உரிய தரப்பினரிடம் கொண்டுச் சென்று உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதும் மக்கள் சேவையாகும். இதனை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மனதில் கொள்ள வேண்டும். எமது தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்ற காலம் முதல் அந்தச்சங்கத்துக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி இன்று இந்தச்சங்கம் அமைச்சுப்பதவி , பாராளுமன்ற உறுப்பினர் பதவி , மாகாணசபை உறுப்பினர் பதவிகள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் கொண்ட சங்கமாக திகழுகின்றது. இதற்கு அமைச்சர் திகாம்பரத்தின் விடாமுயற்சியும் மலையக மக்கள் மீது அவர் கொண்ட அதீத அக்கறையுமே காரணமாகும். இன்று மலையகத்தமிழ் மக்களுக்குக் காணியுரிமை , வீட்டுரிமை போன்றனவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்படுகின்றார். இவரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் எமக்கான வழிகாட்டல்களாக எடுத்துக்கொண்டு மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)