எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி அட்டனில் ஏற்பாடு செய்திருந்த எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:
இலங்கையின் பலம் மிக்க அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி திகழ்கிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மக்கள் மனம் அறிந்தே அரசியல் தீர்மானங்களை எடுத்து வருகின்றனர்.
மலையகத் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்ற உண்மையான தலைவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களாவர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசாங்க காலத்தில் தடைப்பட்டுள்ளன.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார் அதன் பின்பு ஏற்படுத்தப்படவிருக்கின்ற அரசாங்கத்தின் ஊடாக மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படும்.