தலவாக்கலை வட்டகொடை சவுத் மடக்கும்புர தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 20 வீடுகளில் வாழ்ந்த சுமார் 96 பேர்
அத்தோட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மண்சரிவு காரணமாக பல வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமாகியுள்ளதுடன் கூரைகளும் சேதமடைந்துள்ளன ஒரு சில வீடுகளில் நீர் கசிந்து வீட்டினுள் புகுந்துள்ளது இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ராமேஸ்வரன் இவர்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் ஜனாதிபதியுடன் பேசி விரைவில் வீடுகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மடக்கும்புர பிரதேசத்தில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவுமானால் பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த மண்சரிவு அபாய பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்கரப்பத்தனை நிருபர்.