மதுபாவனை தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாத சிக்கலில் மாட்டியுள்ள மலையக அரசியல் தலைமைகள்!

0
151

இருவாரங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் நடைபெற்ற மது ஒழிப்பு பிரச்சாரத்தின் போது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 1600 கோடி ரூபாவிற்கு மது அருந்தப்படுவதாகவும், மதுபாவனையில் இந்த மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இந்த மாவட்டத்திலேயே அதிகமாக பெண்கள் மது அருந்துவதாவும் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதும் எதற்கும் அறிக்கை விட காத்துக்கொண்டிருக்கும் எந்தவொரு மலையக அரசியல்வாதியும் இது வரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை என்பது வேதனை குறிய விடயமாகும்.

இக் கருத்தை வேறு யாராவது சொல்லியிருந்தால் அன்று ஜனாதிபதியின் மேடையில் இருந்த பல அரசியல்வாதிகள் மலையக பெண்களை இழிவு படுத்திவிட்டதாக கூறி வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டிருப்பார்கள். அன்று மேடையில் அமர்ந்து இருந்த அரசியல் வாதிகள் அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்தது

நுவரெலியாவில் விற்பனையாகும் மதுவின் பெறுமதி இலங்கையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதாக காட்டப்பட்டாலும், நுவரெலியா மாவட்டத்திற்கு வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் வரும் இலட்சக்கணக்கான வெளிமாவட்டத்தை சார்ந்த பணம் படைத்தவர்களும், யாத்திரை என்ற பெயரில் வரும் இலட்சக்கணக்கானோர் அருந்தும் மதுவின் பெறுமதியும் இந்த பெறுமதியில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

பெருந்தோட்ட மக்களும் வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களும் அருந்தும் மதுவின் பெறுமதிகளை பிரித்துக்காட்டுவதிலுள்ள சிக்கல் காரணமாக மலையக மக்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறார்கள் என்று மேல்வாரியாக தீர்மானிக்க முடியாது.

இவ்வளவு அதிகமான மது அருந்தும் அளவுக்கு பெருந்தோட்ட மக்கள் வருமானம் பெறுகையில் அவர்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்று தோட்ட கம்பனிகள் வாதிடுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விடயங்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு மலையக அரசியல்வாதிகளுக்கு இல்லையா?

இதே வேளையில் இந்த மாவட்டத்தை இவ்வளவு மோசமாக பாதித்திருக்கும் மதுபாவனை பிரச்சனை தீர்வுக்கு தாங்கள் பங்களிப்பு செய்யப்போவதாக எந்தவொரு மலையக அரசியல் வாதியும் இதுவரை சொல்லவில்லை.

இதிலும் சுயலாபம் இருக்கின்றன தேர்தல் காலங்களில் மது போத்தல்களை வாரி வழங்குபவர்கள் இதனை பற்றி ஏன் யோசிக்கவேண்டும்.

ஒரு வேளை ஜனாதிபதி அவர்களே சொல்வது போன்று இந்த அரசியல்வாதிகளே மதுக்கடைகளை தாங்களாகவோ அல்லது தங்களின் தரகர்கள் மூலமாகவோ நடத்திக்கொண்டிருக்கும் போது அவர்களால் மது ஒழிப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எப்படி சொல்ல முடியும்?

எனவே இந்த விடயம் மலையக அரசியல் வாதிகளின் மனச்சாட்சிக்கு சவால்விடும் விடயமாக மாறியிருக்கிறது.

எவ்வாறாயினும் எந்த காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெருந்தோட்ட மக்கள் மது அரக்கனின் பிடியில் சிக்கியிருப்பதும், அவர்களின் வாழக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மது அரக்கனின் பிடியிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனை கருத்தில் கொண்டே மதுவுக்கு அடிமையாயிருக்கும் கலாச்சாரத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக கடந்த பத்து வருடங்களாக பிரிடோ நிறுவனம்“மதுவற்ற தீபாவளி“ என்ற பெயரில் பாரிய பிரச்சார இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறது.

இதன் விளைவாக தீபாவளி பூஜையில் மதுபானத்தை படைத்தல், பண்டிகை காலத்தில் மதுபோதல்களை பகிரங்கமாக எடுத்து செல்லுதல், மதுபாவனை காரணமாக வன்முறைகள் ஏற்படுதல் தீபாவளிக் காலத்தில் இளைஞர் பகிரங்கமாக மது அருந்துதல் என்பன வெகுவாக குறைந்து விட்டன.

இவ்வாறாக ஏற்படும் மாற்றங்களை முன்னெடுத்து சென்றால் மதுபாவனை குறைப்பு விடயத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.  ஆனால் இந்த பாரிய சமூக சீர்திருத்த முயற்சிக்கு ஜனாதிபதியின் மது ஒழிப்பு பிரச்சார மேடையிலிருந்த அரசியல்வாதிகளோ அங்கு சமூகமளித்திருக்காத தலைவர்களோ எந்தவித ஆதரவோ ஒத்துழைப்போ தரவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இப்போது அரசும் மது ஒழிப்பு விடயத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளதால் இது விடயத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும் என எதிர்பார்ப்பதுடன் பிரிடோ நிறுவனத்தில் கள மட்டத்திலான மது ஒழிப்பு பணியில் அரசின் ஒத்துழைப்பை பெற முயற்சி செய்யப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் மதுபாவனையின் பாரதூரம் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்களின் கருத்தின் அடிப்படையில் மலையகப்பகுதிகளில் மது ஒழிப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக அட்டனில் நடைபெற்ற பிரிடோ பணியாளருக்கான கலந்துரையாடலின் போது இது தொடர்பாக பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் தனது ஆதங்கத்தனை தெரிவித்தார்.

அக்கரபத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here