மத்திய மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் தோட்டப் பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்று (23) நேற்றிரவு வீதியில் விழுந்ததன் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதியில் விழுந்து கிடந்த பாரிய மரம் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து, அவ்வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூங்கில் தொகைகள் பிரதான வீதியில் வீழ்ந்துள்ளதால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மிக அவதானமாக செல்ல வேண்டும் என பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிலவும் பலத்த காற்றினால் உயர் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், மஸ்கெலியா சிவனொளிபாதமலை நல்லதண்ணி பகுதியில் நேற்று (23) பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட வண்ணமே உள்ளதால் அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாவனையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)