நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பல மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 22 ம் திகதி பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வட்டவளை பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் பாறிய மரம் ஒன்று புகையிரதம் என்ஜின் பகுதியில் சரிந்து வீழ்ந்தமையினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டன.
குறித்த புகையிரதம் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற போது மூன்று இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டு இன்று அதிகாலை 3.30 மணியளவிலேயே கொழும்பு சென்றதாக புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வட்டவளை பகுதியில் புகையிரதத்தில் முறிந்து வீழ்ந்த மரத்தினால் புகையிரத என்ஜின் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.தற்போது புகையிரத பாதையில் வீழ்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமையினால் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பதுளை மற்றும் கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்த புகையிரதங்கள் தடைப்பட்டமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதே வேளை இன்று 23 அதிகாலை ஹட்டன் லக்ஸபான பிரதான வீதியில் மிக்போர்ட் பகுதியில் பாறிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியூடான பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டன.
குறித்த மரத்தினை வெட்டியகற்றும் பணியில் பிரதேசவாசிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் பாதுகாப்பு பிரினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன இதனால் விவசாய நடவடிக்கைகள் வர்த்தக நடவடிக்கை பெருந்தோட்ட கைதொழில் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளை கடும் காற்று வீசுவதனால் மரங்களுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறித்த நிலையம் குறிபிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்