மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவிப்பு!!

0
159

மத்திய மாகாணத்தில் மாகாண அமைச்சின் ஊடாக ஆசிரியர் பற்றாக்குறை மாத்திரம் தீர்க்க முடியாத நிலையில், மத்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இதற்கான தீர்வை பெற்றுக்கொள்வோம் என மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், ராகதீஸ்வர கலை நிகழ்வும் பாடசாலையின் அதிபர் தலைமையில் 04.05.2018 அன்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல பாடசாலைகளுக்கு தேவையானவற்றை செய்துக்கொடுத்துள்ளோம். தலைவர் தொண்டமான் ஐயா அமைச்சராக இருக்கின்றபொழுது ஒவ்வொரு முறையும் இருக்கின்ற அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பல முறை ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. நியமனங்களை பெற்றுக்கொள்வதகான சந்தர்ப்பங்கள் எம்மிடம் இல்லை.

மத்திய மாகாணத்தில் மூன்று மாவட்டத்திலும் 2437 ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்றது. இது தொடர்பாக மாகாண முதலமைச்சரின் ஊடாக ஜனாதிபதியின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுக்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் மலையக தோட்டப்புற பாடசாலைகளுக்கு பாரிய நிதிகள் ஒதுக்கப்பட்ட போதிலும் அந்நிதிகள் ஊடாக பாடசாலை அபிவிருத்திக்கென கட்டிடங்கள் அமைக்க இடங்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கின்றது.

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் தோட்டப்புறங்களில் பாடசாலைகளை அமைத்துக்கொள்வதற்கு இடங்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது.

இன்று மலையக மக்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் இன்று இடங்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் அரசியலுக்கு அப்பால் சென்று நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் அப்பொழுது தான் எங்கள் சமூகம் ஒரு சிறந்த சமூகமாக முன்னேற்றமடையும் என்றார்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here