மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வியமைச்சு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே வேளை இந்த அமைச்சின் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தாமல் செயற்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினரமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
23 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெர…ிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
மூன்றரை வருடத்துக்குப் பிறகு மத்திய மாகாணசபையில் மீண்டும் தமிழ்க்கல்வியமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர அவசரமாக இந்த அமைச்சுக்கான பதவி பிரமாணமும் மாலை வேளை ஒன்றில் இடம் பெற்றது. மத்திய மாகாண விவசாய அமைச்சருக்கு மேலதிகப் பொறுப்பாக இந்தக்கல்வியமைச்சு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த விவசாய அமைச்சின் பொறுப்பில் தமிழ்க்கல்விப்பிரிவு இயங்கியது. இதன் போது இந்தப்பிரிவு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரிவு போல் செயற்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்க்கல்வியமைச்சு வழங்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இந்த அமைச்சு அரசியல் ரீதியாக செயற்படுமா? குறிப்பாக கல்வி அதிகாரிகள் , அதிபர்களை நியமிப்பது , ஆசிரியர் இடமாற்றங்கள் போன்றனவற்றில் அரசியல்மயப்படுத்தப்படுமா ? இந்த அமைச்சின் செயலாளர் யார் ? இந்த அமைச்சு எவ்வாறு இயங்கப்போகின்றது ? போன்ற விடயங்களை சபைத்தலைவர்கள் எமக்குத் தெளிவு படுத்த வேண்டும்.
இந்த நிலையில் மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்குப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான நேர்முகப்பரீட்சைகள் கடந்த மாதம் இடம் பெற்றன. இந்த ஆசிரியர்களுக்கு எப்போது நியமனம் வழங்கப்படுமென்பதை விரைவாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இதே வேளை இந்த நாட்டிலுள்ள 17 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 32 பாடநெறிகளுக்கான மாணவர்களை உள்வாங்குகின்ற போது ஆசரியர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை கல்வியமைச்சு மாகாண கல்வியமைச்சின் ஊடாக பெற்றுக்கொள்கின்றது. இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டே கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையில் மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் விபரங்கள் குறித்த தகவல்கள் கல்வியமைச்சுக்குக் கடந்த வருடம் முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா ? அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்தால் அந்த விபரங்களைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் ஹங்குரென்கெத்த கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் 110 ஆசிரியர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்றது. இந்தத் தகவல்கள் கல்வியமைச்சுக்கு முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா ? என்பது குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு சபைத் தலைவரிடம் கோருகின்றேன்.
எஸ். சதீஸ்.