மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல; கணபதி கனகராஜ்!

0
126

தற்போது மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 730 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய மத்தியமாகாண கல்வி அமைச்சுக்கும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நேற்று நடைபெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிட தொகுதியில் சபை தலைவர் எல்.டி நிமலசிரி தலைமையில் நடைபெற்றது. அதில் கணபதி கனகராஜ் தொடர்ந்து பேசியபோது.

இந்த ஆசிரியர் நியமனம் மிக இலகுவாக கிடைத்த ஒன்றல்ல. கடந்த முறை பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது முழுமையாக தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இந்த விடயம் எமக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிவாரணமளிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஊடாக ஜனாதிபதி அவர்களின் மூலம் மத்திய மாகாண முதலமைச்சர், மற்றும் ஆளுனருக்கும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்தோம். இந்த நிலையில்தான் மாகாண கல்வி அமைச்சு தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கு ஒப்புதலளித்தது.

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக முதலமைச்சர்,மற்றும் அதிகாரிகளுடன் நாம் பல்வேறு வாத பிரதிவாதங்களில் ஈடுபட நேரிட்டது. இவையெல்லாம் இந்த பட்டதாரி நியமனத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற விடயங்களாகும். இதற்காக யாருக்காவது நாம் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக எமது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். விண்ணப்பம் கோரியதிலிருந்து நேர்முகப்பரீட்சை வரை எமது பல்வேறு கோரிக்கைகளையும் சாதகமான முறையில் பரீசிலித்து இந்த நியமனத்தை வழங்குவதற்கு மத்திய மாகாண முதலமைச்சர், ஆளுனர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் விஜயரத்தின ஆகியோரின் பங்களிப்புக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் வீதிக்கு இறக்கி போராடவைத்து எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்க பல்வேறு சக்திகள் முயன்றன. மாகாண சபைக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில்  முறுகளை   ஏற்படுத்த முயன்றனர். நியமனம் ஆரம்ப கல்விக்கு மாத்திரம் வழங்கப்பட போவதாக ஊடகங்களில் தெரிவித்தனர். இந்த நியமனத்தை பகீஸ்கரிக்குமாறு கோரிக்கைவிடுத்தனர் ஆனால் இந்த பட்டதாரிகளுக்கும் எமக்கும் இருந்த புரிந்துணர்வு காரணமாக இவையெல்லாம் சாத்திப்படவில்லை. தற்போது நியமனம் வழங்கும் திகதியையும், நியமனம் வழங்கும் இடத்தையும் தெரிவித்து பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பெறவுள்வர்கள் மனதில் இடம்பிடிக்க முற்படுகின்றனர். எது எப்படியிருந்தாழும் வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தொகையானவர்களுக்கு மத்திய மாகாண சபையின் ஊடாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொள்பவர்கள் மலையக கல்விக்கு பெரும் பங்காற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here