மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற துணைக்குழு (கோப் குழு) முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணைக்காகவே மத்திய வங்கி ஆளுனர் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் காலத்தில் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மத்திய வங்கி ஆளுனர் என்ற பதவி நிலைக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த காரணத்தினால் புதிய ஆளுனர் இன்று விசாரணைகளுக்குச் சமூகமளிக்கவுள்ளார்.
இன்று மாலை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக கோப்குழு அறிவித்துள்ளது.