மனதை உருக்கும் மலையகத்தில் இருந்து வந்த சிறுகதை “ஏக்கம்”

0
171

ஏக்கம்

இயற்கை சீற்றத்திற்குட்பட்டு பிறம்பொடிந்த கூடை போல் ஆங்காங்கே சதுரப் பிளவுகளை கண்டிருந்தது அந்த மண் பாதை. அப்பாதையில் செல்வோர் பத்தடிக்கு ஒரு சருக்குகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மலையகத்தில் பிறந்து மண் பாதைகளையும் மலைமேடுகளையும் பற்றிய விளக்கமளிப்பது சற்று விந்தையான விடயம் தான்.

இருப்பினும் ஆங்கிலேயன் வகிந்தெடுத்த மலைக் கொழுந்தின் தலை மேடுகள் வாரப்படாத வடுக்களாய் காயப்பட்டு நிற்பதை கம்பனிகள் கண்டகொள்ளாதது வேதனை தினமும் விதைத்துத்தான் செல்கிறது.

காலங்காலமாய் இப்பாதையில் பயணித்திருப்பினும் இன்று தான் ஒரு ஆசிரியன் என்ற உணர்வோடு தோளில் பையையும் நெஞ்சில் கனவுகளையும் சுமந்து கொண்டு தேயிலைக் கொழுந்தின் வாசனையை சுவாசித்தப்படி மண் பாதையில் நடப்பது அருணுக்கு வெகு அலாதியை தந்தது.

உயர்தரம் பயின்று தொழில்வாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது ஆசிரிய உதவியாளர் நியமனம். அதில் நியமனம் பெற்று ஆசரிய உதவியாளராய் ஹட்டன் பிரதேச ஆரம்பப் பரிவு பாடசாலையென்றிற்கு உள்வாங்கப்பட்டவர் தான் அருண். கற்பித்தலுக்கு பயிற்சி அவசியம் தான் அதை விடவும் பொறுப்புணர்வும் தேடலும் உள்ள ஆசிரியர்களால் சிறந்த மாணாக்கரை உருவாக்க முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தது,
ஆசிரியர்துவம் பெற்ற போது ஆரம்பப்பிரிவில் தரம் மூன்று வகுப்பாசிரியராக பொறுப்பேற்ற அருண் பல்வேறு நுட்பமுறைகளைக் கையாண்டு கற்பிக்க எத்தனித்தமை என்பவற்றைக் கண்ட பல மூத்த ஆசிரியர்கள் உத்வேகமளித்தனர். பாடசாலைக்கு நேரத்திற்கு வருகை தருவது, மாணவரது சுய சுத்தம், ஒழுக்கம், விழுமியம், ஆற்றல் வழிபாடுகள் பேன்ற விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தது பாடசாலை மட்டத்தில் அனைவரது கவனத்தையும் அருணின் பால் ஈர்த்தெடுத்தது.

எனினும் மாணவர்களின் கற்றலுக்கு வரும் சோதனைகளை தவிர்க்க முனைந்தால் அது நடவாத காரியம் தான்.

பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என சகல தரப்பிலும் முயற்சிக்கும் போதுதான் அதன் தீவிரத்தை குறைக்கலாம். அருணும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை போல் மாணவவர்களின் பெறும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார். தினமும் பாடசாலை வந்தாலே ஒரு மாணவன் ஐம்பது சதவீத கற்றலுக்கு தயாரிவிடுகிறான் என்பது அருணுக்கு தெரியும்.

சில மாணவர்கள் வாரத்தில் இரண்டு தினங்கள் வருகை தருவதும் பின்னர் வீட்டில் இருந்து விடவதுமாக இருப்பது அருணுனின் தொடர்ச்சியான கற்பித்தலுக்கு இடையூராக அமைந்தது. ஏனையோரோடு ஈடுகொடுத்து தனது முழு உழைப்பையும் முதலீடு செய்து பணியாற்ற எத்தனித்த அருணுக்கு எப்போதும் ஒரு ஏக்க பார்வையுடனும் அழுக்கான ஆடையுடனும் வருகை தரும் வசந்தன் பெரும் சாவாலுக்குரியவனாக இருந்தான்.

அவனது லீவுக்கான காரணங்கள் வெகு வினோதமாய் இருக்கும். சில வேளைகளில் அவன் பொய் சொல்கிறானா! உண்மை சொல்கிறானா! என கண்டு பிடிக்கவே முடியாமல் தினறி போவார் அருண்.

ஆனால் அவன் ஓரளவு படிக்கக்கூடியவன் என்பதையும் முயற்சித்தால் சராசரி மாணவர்கள் வரிசையில் இடம் பிடிக்கக்கூடியவன் என்பதையும் பல்வேறு கற்றல் சந்தர்ப்பங்களின் போது அவன் வெளிப்படுத்தியிருந்தமை அருணை ஈர்த்திருந்தது.

இன்று காலையில் கூட பாடசாலைக்கு வருகை தராத காரணத்திற்காக கரும்பலகையில் சாய்ந்த படி நின்ற மாணவர்களில் வசந்தனும் ஒருவனாக இருந்தான்.

காரணம் கேட்ட போது விட்டில் சமைக்க வில்லை, அதனால் தான் வரவில்லை என்றான். அருணுக்கு இன்று கோபம் அதிகமாகவே வந்து விட்டது. ஏனெனில் அரசாங்கத்தினால் உரிய மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற காலை போசாக்கு உணவு அப்பாடசாலைக்கும் வழங்கப்படுகின்றது அப்படியிருக்க உணவை ஒரு காரணமாக கூறியதை அருணால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

வழமைக்கு மாறாக வசந்தனை அதிகமாக அடித்து விட்டார். அடி வாங்கிய வசந்தனின் கண்களில் மல மலவென கண்ணீர் கொட்டியது.

“நா பொய் சொல்லல சேர். உண்மையாவே இன்றைக்கு எங்க வீட்டுல சமைக்கல, ஆச்சிக்கு சுகமில்ல……….”

வார்த்தைகள் முடியுமுன்னமே விம்மல் வெடிக்க அவன் தேம்பித் தேம்பி அழுதபோது அருணுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி சரி போய் உட்காரு என்று நிலமையை சமாளித்து கற்பிக்க துவங்கி விட்;ட போதும் அவரை அறியாமலே அவ்வப்போது கண்கள் வசந்தனை தேடிற்று.

அவன் அழுகையை நிறுத்தியிருத்தாலும் இயல்பு நிலையை அடையவில்லை என்பதை அவனது கண்கள் பரைசாற்றி நின்றன. பாடசாலை நிறைவடையும் நேரம் அவனுடன் சிறிது பேச வேண்டும் என திர்மானித்துக் கொண்டவர் அப்போது எதுவும் பேசவில்லை. பாடசாலை நிறைவடையும் நேரம் வசந்தனை அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு சென்றார் அருண் சேர்.

“உனக்கு உண்மையில என்ன பிரச்சின, உங்க அம்மா வெளிநாட்டுல இருந்து காசு அனுப்புராங்க தானே, உங்க அப்பாவும் உனக்கு வேண்டிதெல்லாம் வாங்கித்தாராரு தானே, பிறகு ஏன் நீ ஸ்கூலுக்கு ஒழுங்கா வாரதில்ல.”

என்று சற்று கனிவோடு வினாவினார். வசந்தன் தழுதழுத்த குரலில்
“சேர் எங்க அம்மா இப்ப காசு அனுப்புறதே இல்லையாம் சேர், அவங்க வேல செய்த இடத்துல இருந்து வேற இடத்துக்கு தப்பிச்சு பொய்டாங்களா சேர், இப்ப இருக்குற இடத்துல சம்பளம் தர மாட்டேங்குராங்களா, இப்படிதான் எங்க அப்பா சொல்ராரு, போன மாசம் வரைக்கும் எங்கம்மா வருவாங்க வருவாங்கனு சொல்லிக்கிட்டிருந்தாரு சேர்.

நானும் ஆசையாக இருந்தேன். ஆனா இப்ப இன்னும் இரட்டு வருசம் கழிச்சுதான் வருவாங்களாம். அதுவரைக்கும் நான் ஆச்சி கூடதான் இருக்கனுமாம்.”
மீண்டும் குமுங்கி குமுங்கி அழ ஆரம்பித்த வசந்தனை எப்படி சமாதானப்படத்துவதென்று திகைத்துப் போனார் அருண்.

கடவுளே, இந்த சமுதாயத்துக்கு எப்ப தான் விடிவு வரும்? பணத்தை சேர்க்க விமானத்தில் பறக்கும் அபலைத் தாய்மார்களுக்கு தன் அருமை பிள்ளைகள் கதிகலங்கி நிற்கும் அவலம் எப்போது புரிய வரும்? குடும்ப மேம்பாட்டுக்காக உழைக்கப் போகும் பெண்களுக்கு இறுதியில் குடும்பமே மிஞ்சுவதில்லையே! தனக்குள் எழுந்த பல கேள்விகளை உள்ளத்தில் கிடத்தி விட்டு ,

“இங்க பாரு வசந்தன் உங்க அம்மா உனக்காகத்தானே உழைக்கப் போயிருக்காங்க. அவங்க வரும் போது நீ நல்லா படிச்சு முதல் நிலையில் இருந்தாதான் உன்ன பார்த்து பெருமை படுவாங்க. நீ படிக்காம அம்மாவையே நினைச்சு கவலைபட்டக்கிட்ட இருந்தா உன் எதிர்காலம் கேள்விக் குறியா போகும் புரியுதா……..”

என வசந்தனை தோல்களில் தட்டிக்கொடுத்தார். அந்த வார்த்தைகள் எந்த விதத்திலும் வசந்தனை சமாதானப்படுத்த போவதில்லை என்பது தெரிந்தும் அவனை அழ விடாமல் பார்த்துக்கொள்வதற்காக மட்டுமே அவ்வாரு கூறினார்.

உண்மையை மறைக்க தெரியாத அந்த பிஞ்சு உள்ளம் “சேர் எங்க அம்மா என் கூட இருந்தப்ப நா தான் முதலாம் பிள்ளையா வருவேன். அவங்க வெளிநாட்டுக்கு போன பிறகு என்ன அன்பா பாத்துக்க யாருமே இல்ல. எங்க ஆச்சி வயசானவங்க அவங்களுக்கு கண்பார்வையும் குறைவு. வீட்டுவேல செய்ய நா தான் அவங்களுக்கு உதவனும். சில நேரம் நாதான் சமையலும் செய்வேன். அது நாலதான் வீட்டுப்பாடம் செய்யாம உங்ககிட்ட அடி வாங்குவேன் சேர்” என மனம் விட்டு கூறினான்.

“இப்ப என்னதான் பண்ணலாம்னு நீ நினைக்கிற. உங்க அம்மா வரவரைக்கும் நீ படிக்க மாட்டியா?”
என ஒருவித ஏக்கம் கலந்த சோகத்தோடு வினவிய ஆசிரியரிடம் அதற்கு “எங்கம்மா என்கூட இருக்கனும் சேர்” என்றான் வசந்தன்.
ஹம்ம்…….. உங்க அம்மா சிக்கிரமா உங்க வீட்டுக்கு வரனும்னு நான் கடவுளை பிரார்த்தின்கின்றேன் என்று கூறி அவனது கண்ணத்தில் தட்டிக்கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன் கையறு நிலையை நொந்து கனந்த இதயத்தோடு வீடு திரும்பினார் அருண்….
இரா.நிக்சன்லெனின்
நோர்வூட் கீழ்பிரிவு,
நோர்வூட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here