பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
“நீ இல்லாமல் நான் ஒரு நாளும் வாழமாட்டேன்” என்று மனைவிக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த கணவன், மனைவி உயிரிழந்த தினத்தன்று மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, வாலான, மங்கள மாவத்தையைச் சேர்ந்த நெலும் கல்ஹரிகா ஹேமகாந்தி என்ற 64 வயதுடைய பெண்ணும் அவரது கணவரான 68 வயதுடைய மஸ்தியகே டொன் ஜயந்த குணதிலக்க என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான தம்பதியருக்கு திருமணமாகி சுமார் நாற்பத்திரண்டு வருடங்களாகியுள்ளது.
கடந்த முப்பது வருடங்களாக இந்த பெண் நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். “என்றாவது ஒரு நாள் நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்…” என கணவர் அடிக்கடி கூறியுள்ளார்.
இந்த நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்டறிந்த கணவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மனைவியின் பிரேத பரிசோதனை நாகொட வைத்தியசாலையிலும் கணவரின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.