இலங்கையினை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாக மலைநாடு என்பது காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் மலையக மக்கள் சுமார் 6 வீதமாக உள்ளனர். தற்போது மலையக பகுதி கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குறிப்பாக குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இந்த வகையில் மலையகத்தில் இன்று மலையகத்தில் உயர் கல்வி துறையானது வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாய் அமைந்தது. இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சுமார் 03 தசாப்தங்களுக்கு பின்னரே மலையக பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.
இவ்வாறான வாய்ப்புகளை தாமதமாக பெற்றுக்கொண்டாலும் அவற்றை மிகச் சரியாக மலையகச் தமிழ் சமூகம் பல வழிகளாலும் மற்றும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் புதிய மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
இன்றைய உயர்கல்வி குறிப்பாக பாடசாலைக் கல்வியிலிருந்து சற்று உயர்ந்து, பல்கலைக்கழகக் கல்வி என்ற நிலையிலே காணப்படுகின்றது. பொதுவாக ஆரம்பத்தில் மலையகத்திலிருந்து உயர்கல்விக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாக காணப்பட்டது.
ஆனால் இன்று இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படுகின்றார்கள். இங்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் ஏனைய இனங்களுக்கு மத்தியிலே தெரிவு செய்யப்படுகின்றார்கள். எனவே இன்று மலையக சமூகமானது ஒரு படிமுறையான வளர்ச்சி நிலையினை பெற்றுள்ளது என்று கூறலாம். குறிப்பாக ஆரம்பத்தில் கலை மற்றும் வர்த்தக துறைக்கு மாத்திரமே தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். ஆனால் இன்று மருத்துவம், பொறியியல், விவசாயம் மற்றும் தொழினுட்ப துறைகளுக்கும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படுகின்றமை ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இன்று பார்த்தால் 14 சார் பல்கலைக்கழகங்களிலும் இன்று பயில்கின்ற சுமார் 100,000 மாணவர்களில் சுமார் 6000 பேர் மாத்திரமே மலையகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாகவும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இன்று காணப்படுகின்றனர்கள். குறிப்பாக இன்று உலகில் புகழ்பெற்ற விண்வெளி நிலையமான நாசாவில் கூட மலையக தமிழ் இளைஞர்கள் தொழில் நிலையில் காணப்படுகின்றார்கள்.
இலங்கையின் மாகாணங்களை அடியொற்றிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டமை பல்கலைக்கழக வரலாற்றிலே மேலும் ஒரு முக்;கிய நிகழ்ச்சியாகும். இது இடநிலையத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவாக்கமாக மட்டுமே அமைந்துள்ளதாயினும், குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் தொழிற்படும் மாகாணங்களிலுள்ள மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகங்களிலே பயில்வதற்குரிய சிறப்பு அனுமதித்திட்டங்களோ செயற்பாட்டு முறைகளோ உருவாக்கப்படவில்லை. இன்று மலையக பகுதிகளில் உயர் கல்வியினை தொடர்கின்ற மாணவர்களுக்கு இதுவொரு பாரிய சவாலான விடயமாக மாறிவிட்டன.
அதாவது தமது சொந்த இடங்களிலே பட்டப்படிப்புக்களை தொடர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் ஒரேயொரு உயர்க்கல்வி நிறுவனமாக பேராதனை பல்கலைகழகம் என்பது காணப்படுகின்றது. இதற்கு மாறாக மேல் மாகாணத்தில் நன்கிற்கு மேற்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்கள் அமையப்பெற்றிருக்கின்றன. ஆகவே இங்கு தமிழ் மாணவர்களின் தொகையினை எடுத்துக்கொண்டால் மிக அரிதாகவே காணப்படுகின்றது. தற்போது மலையகத்துக்கு என்று ஒரு தனியான பல்கலைக்கழகம் என்பது காணப்படவில்லை. இருந்த பேராதனை பல்கலைக்கழகமும் முழுமையாக தமிழ் மக்களுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளன என்று குறிப்பிடலாம். அண்மைக்காலங்களில் மலையக அரசியல் வாதிகளின் வெறும் பேச்சுக்களில் மட்டுமே மலையகத்துக்கு என்று ஒரு தனியான பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோசம் எழுப்புகிறார்கள்.
மலையகத்தில் அதிகமாக தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதியாக நுவரெலியா மாவட்டம் என்பது காணப்படுகின்றது. இங்கு உயர்க்கல்வி நிலையானது இன்றுவரை வளர்ச்சி பெறாமைக்கு இங்கு பாடசாலைகள் தேசிய பாடசாலை என்ற வகைப்பாட்டில் உள்வாங்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே ஒரு பாடசாலை மட்டுமே தேசிய பாடசாலையாக காணப்படுகின்றது. எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மாணவர்கள் என்றுமே தேசிய மட்டத்திற்கு தங்களை வெளிக்காட்ட முடியாத தன்மையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலமைகளுக்கு அடிப்படையிலே அரசியல் மூலப்பொருளே காரணமாக அமைகின்றன. எதிர்கால மலையகத்தில் சிறந்த உயர்க்கல்வி நிலை காணப்பட வேண்டுமாயின் முதலில் கல்விச் செயற்பாட்டிலிந்து அரசியல் பங்கேற்றலை தவிர்த்தல் வேண்டும். ஆகவே எதிர்கால மலையக சமூகமானது கல்வித்துறை ஒன்றினால் மட்டுமே உயர்வடைய செய்ய முடியும்.
வி.பிரசாந்தன் B.Ed. (Hons) HNDE reading – ஆசிரியர்.