நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, குகுல கங்கையின் வான் கதவு திறக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தென்ன பகுதியில் இன்று விடியற்காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தற்போது போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மேல் கொத்மலை, கெனியன், மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்ந்துள்ளது.
இதனால் நீர்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் பிரதேச மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.