மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் லயன் முறை வாழ்க்கையிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே 1994ம் ஆண்டு எனது அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு என்ற புதிய அமைச்சினை உருவாக்கினேன்.
மறைந்த மலையகத்தின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் கீழ் இந்த அமைச்சு இயங்க நான் வித்திட்டேன். முதல் முறையாக இந்த அமைச்சு உருவாக்கிய பொழுது மலையக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை செய்யுங்கள் என நான் வேண்டுக்கோள் விடுத்தேன். 20 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதி சென்ற போதிலும் இன்று நான் கண்ட கனவு நனவாகியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்காக எனது அரசாங்க காலத்தில் அதிக பட்ச நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் தனி வீடுகளை அமைப்பதற்காக காணிகள் பெறுவதில் சிக்கல்கள் இரப்பதாக அன்றைய அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
ஆகையால் பெருந்தோட்ட நிர்வாகங்களை நிர்வகிக்கும் கம்பனிகாரர்களிடம் பேசி காணிகளும், பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டவில்லை. இன்று இந்த அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக தனி வீடுகள் அமைக்கும் திட்டம் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது.
இலங்கை நாடு பல்வேறு இன மக்களை கொண்ட நாடாகும். இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் இந்நாட்டில் அனைத்து மக்களும் இலங்கையர்களே அணைவரும் அனுபவிக்கும் உரிமைகள் சமமான உரிமைகளாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் தொடர்ந்தும் வழியுறுத்தியும் முன்னெடுத்தும் வருகின்றோம் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)