மலையகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாய காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் டயகம, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளில் நிரம்பிய வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது.
விவசாய காணிகளில் நீர் வற்றும் நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை மேலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை காலங்களில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் இவர்களுக்கான நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குடும்ப பொருளாதார சிக்கலை நிவர்த்தி செய்யும் வகையில் மேலதிக வருமானத்திற்காகவே விவசாய நடவடிக்கையை முன்னெடுக்கபடுவதாகவும், பாதிக்கப்படும் பட்சத்தில் நிவாரண உதவிகள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது போவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்ற கடனை மீள செலுத்த முடியாத நிலையிலும், அடகு வைத்த தங்க நகைகள மீட்டு எடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விவசாயத்திற்கென அமைச்சு இருக்கின்ற பொழுதிலும் அதில் இருக்கின்ற வேலை திட்டங்கள், உதவி திட்டங்கள் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளுக்கு சென்றடைவதில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.
எனவே குறித்த அமைச்சு இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)