மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வீடு கட்டி கிராமங்களை உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைச்சின் மூலம் கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1100 ஐ தாண்டவில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு மலையக வீடமைப்பு தொடர்பாக கணபதி கனகராஜ் கருத்து தொரிவித்தார்.
மலையகத்தில் புதிய கிராமங்களை அமைப்பதற்காக அமைச்சு ஒன்று இயங்கிவருகிறது. ஆனால் அந்த அமைச்சு இதுவரை எத்தனை கிராமங்களை உருவாக்கியுள்ளது என்பது எவருக்கும் தெரியாது. கிராமம் என்பது முழு தோட்ட லயன்களுக்கும் பதிலாக சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு தொகுதியை உருவாக்குவதே தவிர இருபது வீடுகளை கட்டி அதற்கு பெயர் சூட்டி கிராமம் என்று அழைப்பதல்ல. வீடுகள் கட்டுவதாக விளம்பரம் செய்யும் வேகத்தை இந்த அமைச்சு நடைமுறையில் வீடுகள் கட்டுவதில் காட்டவில்லை.
ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் வீடுகளை கட்டப்போவதாக சொன்னவர்கள் கடந்த இரண்டரை வருடங்களில் கையளித்த வீடுகள் எத்தனை என்பதை மக்களுக்கு தெழிவுபடுத்த வேண்டும்.இவர்கள் இதுவரை 1100 வீடுகளுக்கும் குறைவான வீடுகளையே கையளித்துள்ளார்கள். இதை எவராவது மறுப்பார்களேயானால் வீடுகளை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் முகவரியை பகிரங்கமாக வெளியிட தயாரா?
தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களை அதிகரித்து கொள்வதற்காக ஜனவரி, ஜீன் மாதங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு பல தோட்டங்களில் அது அப்படியே கைவிடப்பட்டுள்ளன. தமது தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக சேர்ந்தால் மாத்திரமே வீடமைப்பு திட்டத்தில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படுமென கூறி அதிகார துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது. பல தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்திதை சேர்ந்தவர்கள் மாத்திரமே இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் ஏற்கனவே வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தமது தொழிற்சங்க அங்கத்தவர் என்ற தகுதியை மாத்திரம் கருத்திற்கொண்டு வீட்டிற்கு சிபாரி;சு செய்யப்பட்டுள்ளது.
பல தோட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்பது பெருத்த கேள்விக்குறியாக இருக்கிறது. கட்டி முடிக்க முன்னரே அடித்தளம், சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிலையை இல்லை என்று எவராவது மறுப்பார்களானால் அவர்களை என்னோடு அழைத்து சென்று உண்மை நிலைமையை காட்டுவதற்கு முடியும். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு ஒரு பகுதி நிதி தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்து வட்டிக்கு வழங்கப்பட்ட கடன் மூலம் பயன்படுத்தப்படுகின்றது.
அதனால் தரமற்ற வீடுகளை வழங்கி தோட்டத் தொழிலாளர்களளை ஏமாற்ற இடமளிக்க முடியாது.
இந்த உண்மைகளை வெளியிடுகின்ற போது சிலர் காட்புணர்ச்சி காரணமாக செல்லுவதாக தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டரை வருடகாலமாக நாம் தேவையான அவகாசத்தை வழங்கி வேலைத்திட்டங்களை அவதானித்துக் ;கொண்டிருந்தோம். ஆனால் மலையக மக்கள் அப்பட்டமாக ஏமாற்றப்படுவதை அறிந்தும் அமைதியாக இருக்க முடியுமா? வீடமைப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற கட்டடப்பொருட்கள் அரச தர கட்டுப்பாட்டு பணியகத்தினால் அங்கீகரிக்கப்படனவா? தரமற்ற கட்டடப்பொருட்கள் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளினால் எதிர்காலத்தில் பாதிக்ப்படபோவது அதில் குடியிருக்கப்போகின்ற தோட்டத்தொழிலாளர்களே இந்த நிலையில் உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்