முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் நலன் கருதி முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் குறித்து மலையகத் தமிழ் மக்கள் இன்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நோட்டன் தோட்ட ஆலயத்துக்கான குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோட்டன் தோட்டத் தலைவர் நவரட்னராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோட்டன் பிரதேச அமைப்பாளர் நந்தகோபால் ஆகியோரும் தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
1977 ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்
படுத்தியவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தபோதும் அவர்களால் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய உரிமைகளையும் உரிய முறையில் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அந்த அமைச்சுப் பதவிகளை வகித்த அவர்களின் வழித்தோன்றல்கள் இன்று இதனை ஒப்புக் கொள்கின்றார்கள்.
ஆனால் மலையக மண்ணின் மைந்தரான திகாம்பரம் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று மக்களுக்கு உரிய வகையில் சேவையாற்றியதன் காரணமாக அவரை மக்கள் சேவைக்காக இன்னும் முன்னுதாரணமாக கொள்கின்றார்கள்.
இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தனது அரசியல் அதிகாரத்தின் ஊடாக மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏனைய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் காலம் வெகுதூரமில்லை.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக நோட்டன் தோட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து உள்ளோம். பின்தங்கிய பிரதேசம் என்று கருதாமல் தொடர்ந்து இந்தத் தோட்ட மக்களுக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப எதிர்காலத்திலும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க உள்ளோம். தற்போதைய அரசாங்கம் மக்களின் எந்தத் தேவையும் பூர்த்தி செய்வதாக தெரியவில்லை.
அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. மக்களுக்கு தினந்தோறும் கையேந்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஒன்றை சகல மக்களும் எதிர்பார்க்கின்றனர். மலையக மக்களுக்கு கோதுமை மாவை கொடுத்து ஏமாற்ற முடியாது. உயர் காலத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தாத காரணத்தினால் மாகாணசபை உறுப்பினர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.