மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான அழுத்தங்களை அரசாங்கமும் பிரயோகிக்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் – என்று எச்சரித்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் இன்று டயகமவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்துவருகின்றன. மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெருந்தோட்டக் கம்பனிகள் உடனடியாக சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை அரசு வழங்கியுள்ளது, எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
டயகமவில் ஆரம்பம் மட்டும்தான், சம்பள உயர்வு விரைவில் கிடைக்காவிட்டால் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும். வேலை நிறுத்தப் போராட்டத்திலும் இறங்குவோம். இது தொழிற்சங்கங்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, கம்பனிகளுக்கு எதிரான போராட்டமாகும்.” – என்றார் திகாம்பரம்.