மலையக அரசியல் கலாசாரமும், சமூக நகர்வும்! (தனுஷன்)

0
198

இனத் துவேசமும், மதத் துவேசமும் வேரூன்றி விருட்சமாகிக் கிடக்கும் இலங்கைத் தீவினிலே, இனபேதம், மத பேதம் தாண்டி ஒரு தாய் மக்களாய் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என வாழும் ஓரிடத்திற்கு உதாரணம் காட்டச் சொன்னால் மலையகத்தை காட்டுவேன், அங்கு வளர்ந்த நாட்களில் ஒரு போதும் நான் கண்டதில்லை இந்த இன, மத துவேசங்களை.

மூவின மக்களும் செறிந்து வாழ்ந்த போதும், “மலையகம்” என்ற பதம், இந்திய வம்சாவளி தமிழர்களை அடையாளமிட்டுக் காட்டும் பதம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனைய சமூகத்தவரை விட பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களென நோக்கப்படும் இவர்களின் மறுப்பக்கத்தை யாரும் ஆழ்ந்து பார்ப்பது கிடையாது. நாட்டின் வளப்பங்கீடாகட்டும், உதவிகளாகட்டும் மிகக் குறைந்தளவிலேயே இந்த மக்களை வந்து சேர்கின்றன. இடையிலே தரகர்களும், அரசியல்வாதி வேடமிட்டோரும் அதில் பாதியை சுரண்டியும் விடுகின்றனர். இவை வெளிச்சத்திற்கு வராத பக்கங்கள்.

இன்று கல்வி, கலை, கலாச்சாரம் என படிப்படியாக வளர்ந்துக் கொண்டிருக்கும் மலையகச் சமூகம் வளரச்சிப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றமை வரவேற்க கூடியதே. ஆனால் வளர்ச்சி வேகத்திலே குறைப்பாடுகள் பல காணப்படுகின்றன. அவற்றில் பிரதானமானது மக்களின் கண்களைக் கட்டி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம். அந் நாடகக் கலாச்சாரம் பற்றியே பதிவே இது.

பெயர்ச்சொல்லும் பல அரசியல் தலைவர்களும் உருவான மலையக மண், இன்று நல்லதொரு தலைமைத்துவமின்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான எனும் சகாப்தம் உரிமைகளுக்காக குரல்கொடுத்த ஓய்ந்த போது, அமரர் சந்திரசேகரன் அக் குறைப்பாட்டை ஓரளவு சரி செய்துக் கொண்டிருந்தார். அவரின் மறைவிற்கு பின்னர், இன்று வரை பதவி ஆசையால் குதிக்கும் அரசியல்வாதிகளையும், அறிக்கைகளை அள்ளி வீசும் அறிக்கைவாதிகளையும் தவிர மலையக மண் கண்டது ஒன்றும் இல்லை.

நாளை ஒரு கட்சி போராட்டம் நடத்த போகின்றது என்பதற்காக, நாமே முதலில் போராட வேண்டுமென நடு இரவில் வீதிக்கிறங்கி போராட்டம் செய்வதும், அந்தக் கட்சி உறுப்பினருக்கு அமைச்சு பதவி கொடுத்தால் நாம் அதனை எதிர்ப்போம் என அறிக்கை விடுவதும், ஏட்டிக்கு போட்டியாக மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக் கொள்வதும், யார் அதிக கூட்டம் சேர்க்கின்றார் எனப் போட்டிப் போட்டுக் கொள்வதும், மிக அடிமட்ட அரசியல் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்றது. பிற நாடுகளிலும், எமது நாட்டின் பிற சமூகங்களிலும் இத்தகைய கலாச்சாரம் மறைந்து பல வருடங்கள் ஓடிய பின்னும் மலையக அரசியலில் இந்நிலை தொடர்வதை “கேவலம்” என்ற வார்த்தையை தாண்டி விமர்சிக்க தெரியவில்லை எனக்கு.

எம் சமூகத்திற்கு இதுவரை செய்தது என்ன?

எமது அரசியல்வாதிகள் (ஆட்சியில் உள்ளவர்கள், இருந்து விட்டு சென்றவர்கள் எல்லா மேதைகளும் தான்) எம் சமூகத்திற்கு இதுவரை செய்தது என்ன? வீட்டுத்திட்டங்கள், கூரைத் தகடு வழங்குதல், கோயிலுக்கு ஒலிப் பெருக்கி, பாடசாலைக்கு மைக் செட், நலன்புரி சங்கத்திற்கு கதிரை, கொங்ரீட் பாதை, மின்சார வசதி, மைதானம் புனரமைப்பு என அத்தியாவசிய செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவர். மக்களும் இவ்வளவு சேவையா என வாய் பிளப்பர். அந்த பாமர மக்களுக்கும், ஏமாற்று அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லையா அது சேவையில்லை, வாக்கு பிச்சைக் கேட்டு ஆட்சி கட்டமைப்பிற்குள் சென்றதன் நோக்கமும் கடமையும்தான் அது என்பது. ஒவ்வொரு அரசியல்வாதியும் அடிப்படை கட்டமைப்புக்களை விஸ்தரித்தது ஒரு சாதனையாக சொல்ல முடியாது அது அவனது கடமை. அவற்றை செய்யவே அவர்கள் ஆட்சி கட்டமைப்பிற்குள் மக்களின் இறைமையின் ஒரு பகுதியை கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.

சரி, என்னுடைய கருத்திற்கு வருவோம், எமது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் எமது அரசியல் தலைமைகள் செய்தது என்ன? சமூக நகர்விற்காய் இந்த அரசியல் அறிக்iவாதிகள் செய்தது என்ன? இன்று தாம் கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்களை செய்து விட்டு அது மாபெரும் புரட்சியென மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் சமுதாய நலனிற்காய் செய்தது என்ன? மலையக சமூகம் தன்னுடைய பாதையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவர்கள் செய்தது என்ன?

மலையகத்தின் இருப் பெரும் கட்சிகளுக்கு தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தையே உரிய காலநேரத்தில் பெற்றுத்தர திராணியில்லை என்கின்றபோதே இவர்களில் கோழைத்தனம் நன்கு புலப்படுகின்றது. மேடைகளிலே தினம் ஒரு தினத்தைக் கூறி சம்பளத்தை பெற்றுத் தருவேன் என மாறி மாறி அறிக்கை விடுவதும், நேரக் காலத்திற்குள் உனது சட்டப்பையில் சம்பளத்தை வைப்பேன் என சொல்வதும், முடியாது என தெரிந்தும் பாராளுமன்றத்திற்குள் தீக்குளிக்க செல்வதும், இந்த நாகரீக கோமளிகளின் சேட்டைகளே (வேறு எப்படி சொல்வது தெரியவில்லை) அன்றி வேறில்லை.

இந்த நாகரீக கோமாளிகள் எத்தனை மலையக பாடசாலைகளை தரமுயர்த்தி இருக்கின்றார்கள்?? எத்தனை பாடசாலைகளின் உள்ளக கட்டமைப்பை விஸ்தீரனம் செய்ய உதவி இருக்கின்றார்கள்??

தங்களால் புனரமைக்கப்பட்ட மைதானங்களில் உரிய பயிற்சிகளை வழங்கி எத்தனை வீர, வீராங்கனைகளை உருவாக்கியிருக்கின்றார்கள்?? பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மாணவர் விகிதத்தை எத்தனை வீதத்தால் அதிகப்படுத்தியிருக்கின்றார்கள்?? எத்தனை பேரிற்கு தொழிற்கல்வியை பெற உதவி இருக்கின்றார்கள்?? அரச துறைகளிலே காணப்படும் புல்வெட்டுதல் தொடக்கம், உதவியாளர், பீயோன் போன்ற எத்தனை அரச வேலை வாய்ப்புக்களை எம்மவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்??? அல்லது மலையகச் சமூக நகர்வு தொடர்பான ஆய்வுகளைத்தான் ஊக்குவித்திருக்கின்றார்களா??? இல்லை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கின்றார்களா?? பாடசாலை இடைவிலகளை குறைத்திருக்கின்றார்களா??? கைத்தொழில் துறையை விருத்தி செய்திருக்கின்றார்களா???

இப்படி சமூக நகர்விற்கு அவசியமானவற்றை எந்தளவு செய்திருக்கின்றார்கள் இந்த நாகாரீக கோமாளிகள். (செய்தமைக்கு ஒன்றிரண்டு உதாரணங்கள் உண்டு, அவை சதவீதத்தில் 0.1 வீதமாகதான் அமையும்) இப்படி சமூக நகர்வினை நோக்கிய பயணத்திற்கு படிக்கட்களை அடுக்காது, கொங்ரீட் பாதையையும், கோயிலுக்கு ஒலிப் பெருக்கியையும் கொண்டு எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்??? வாழ்நாள் சாதனையாக உரிய பயிற்சியின்ற வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்கள் கல்வி துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் எத்தனை??? உரிய நியமங்கள் கடைப்பிடிக்கப்படாத நியமனங்களின் தாக்கம் எத்தனை?? சமூக நகர்விற்கு எதிரான செயற்றிட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து விட்டு மார்தட்டிக் கொண்டு நிற்கும் இவர்களை பார்த்து சிரிப்பதா? அல்லது என் சமூகத்தை நினைத்து அழுவதா என்று கூட தெரியவில்லை.

படிப்பறிவில்லாதவன்தான் இதற்கெல்லாம், காரணம் படித்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்ற தொணியில் பாராளுமன்றம் சென்றவர்களும் சரி, அவ்வாறு சொன்னவர்களும் சரி, இந்த நாகரீக கோமாளித்தனத்தை அவர்கள் மட்டத்திற்கு உயர்த்தி இருக்கின்றார்களே தவிர சமூக நகர்விற்கு ஒரு ஆணியும் பிடுங்கப்படவில்லை.

தொலைக்காட்சி செவ்விகளிலும், மேடைப் பேச்சுக்களிலும் அனல்பரக்க பேசும் இவர்கள், சமூக நகர்வு என்ற கருப்பொருளை அறியாதிருக்கின்றார்களா அல்லது தெரியாததைப் போலக் காட்டிக் கொள்கின்றார்களா?

நிச்சயமாக மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று மலையக மண்ணிற்கு தேவை, தெளிந்த சிந்தனையும், நீண்ட நோக்கும் கொண்ட ஒரு தலைமைத்துவம் தேவை!!! மக்களே சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது!! கொடிப்பிடித்து திரியும் இளைஞர்களே எமது சமுதாயத்தின் எழுச்சி உங்கள் கரங்களிலே, பிடித்திருக்கும் கொடிகளை வீசி விட்டு ஒன்றுப்படுங்கள், கொடிப்பிடித்த கரங்களிலே மலையகத்தை ஏந்த முன்வாருங்கள். உங்கள் பிரதேசங்களிலே, ஊர்களிலே, தெருக்களிலே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், நேரடியாக அரசியலிலே இறங்காவிடினும், யார் எமது தலைமை என்று முடிவெடுக்கும் சக்தியாக மாற உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்தலுக்கு ஒருவனிடம் ஏமாந்த காலங்கள் போகட்டும், வரும் அடுத்த தேர்தல், வருவான் அந்த நாகரீக கோமாளி, கேள்விகளை தொடுங்கள், செய்ததை பட்டியலிடச் சொல்லுங்கள்? செய்யாதைப்பற்றி கேளுங்கள், வாக்கில்லை என விரட்டுங்கள். வாக்களித்த ஏமாந்துக் கொண்டிருக்கும் சமூகம், தேர்தலைப் புறக்கணித்ததாய் வரலாறு பேசட்டும்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது, எமது சமூக நகர்வினை கொண்டு வந்து விடாது, நல்லதொரு அரசியல் தலைமைத்துவம் தேவை, மீண்டும் ஒரு சௌமியமூர்த்தி தொண்டமானோ, சந்திரசேகரனோ, பிறக்கப் போவதில்லை, உருவாக்கிக் கொள்வோம் எம்மை, எமது சமூகத்திற்காக!! சிறுக சிறுக விதைப்போம் சமூக நகர்வென்னும் எமது தேவையை பற்றிப்பிடிப்போம் எமது வளர்ச்சியை!!! ஒன்றுப்பட வழி செய்யும்!!

இனியொரு விதிசெய்வோம்,
அறிக்கை அரசியலை இல்லாது செய்வோம்.

சமூக நகர்வினை நோக்கிய எதிர்ப்பார்ப்புடன்
தனுஷன் ஆறுமுகம்.
சட்ட பீடம் கொழும்பு பல்கலைகழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here