மலையக இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக வேண்டும்; அமைச்சர் திகா அறைகூவல்!

0
118

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எமது இளைஞர்கள் தயாராகி தலைமை ஏற்கத் தயாராக வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.

அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமாகிய ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இளைஞர் படையணி உருவாக்கம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்,

நானும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜும் எதிர் நீச்சல் போட்டுதான் அரசியலுக்குள் பிரவேசித்தோம். எமது வருகையை பலர் விரும்பவில்லை. அரசியலுக்கு வரவிடாமல் செய்வதற்கான அனைத்து உத்திகளையும் கையாண்டார்கள். எனினும், நாம் பயந்து ஒதுங்கி விடவில்லை. மக்களின் அமோக ஆதரவு கிடைத்ததால், படிப்படியாக அரசியலில் வளர்ச்சி கண்டு அமைச்சராகும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். இவ்வாறு திகாம்பமும் திலகராஜும் அரசியலுக்கு வர முடியும் என்றால் மற்றவர்களால் ஏன் முடியாது?
நாம் மிகவும் கஷ்டப்பட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தைக் கட்டிக் காத்து உன்னத நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். இந்த சங்கத்துக்கு 50 வருட கால வரலாறு இருக்கின்றது. நானும் நண்பர் திலகரும் இன்னும் ஒரு சில வருடங்களில் அரசியலிருந்து ஓய்வு பெற்று விடுவோம். அந்த நேரத்தில் நாம் வளர்த்த கட்சியை யாரோ ஒருவர் கையில் ஒப்படைத்து விட முடியாது. இந்த சங்கத்துக்கு மலையக மண்ணில் பிறந்த ஒருவர் தான் தலைமை ஏற்க வேண்டும். எனவே, எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து இப்போதிருந்தே தயாராக வேண்டும். நாங்கள் ஓய்வு பெறும் போது அடுத்த தலைமுறை பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி ம்றத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் வட்டார முறையிலேயே புதிய தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அந்த நேரத்தில் தேர்தல் பணிகளையும் சமூகக் கடமைகளையும் தகுந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல இளைஞர் படையணி உருவாக்கப்படுகின்றது. எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கு தோட்ட இளைஞர்கள் தான் முன்னுதாரணமாக இருந்து செயற்பட வேண்டும். இதை மற்றவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இளைஞர் படையணியில் இணைந்து கொள்ளும் சகல இளைஞர்களுக்கும் முறையான பயிற்சிகளோடு சீருடைகள் வழங்கப்படும். அவர்கள் புதிய தேர்தல் முறையை மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் பயிற்சிகள் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிட அந்தந்த வட்டாரத்தில் உங்களால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வாய்ப்பு தரப்படும். அவரை விருப்பு வெறுப்பற்ற முறையில் வெற்றி பெறச் செய்து அவரின் சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய தேர்தல் முறையில் வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பட்ட வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.

எனவே, எனது அனுமதியின் பேரில் அமைக்கப்படும் “இளைஞர் படையணிக்கு” கட்சியில் உள்ள சகலரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தொழிலாளர் தேசிய சங்கத்தின் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். அது மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் திகழ வேண்டும். 2020ஆம் ஆண்டில் நாம் மலையக மக்களோடு இருப்பது அரசியல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு விடும். அதற்கு முன்னோடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முகங் கொடுக்கத் தயாராக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்பகின்றோம் என்று சிலர் ஏளனப் புன்னகையோடு கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதை நடைமுறையில் எடுத்துக் காட்டி வருகின்றோம். தேர்தல் காலத்தில் நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய ஏழு பேர்ச் காணியில் காணி உரித்துடன் கூடிய தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம். நாம் அரசியல் ரீதியில் சக்தி பெற்றுள்ள காரணத்தால் தான் பெரும்பான்மை மக்கள் நிறைந்துள்ள மாத்தறை பகுதியில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து காணி உறுதிப் பத்திரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழங்கக் கூடியதாக இருந்தது.
இத்தகைய பல வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து எமது சமூகத்தை கௌரவத்தோடு வாழச் செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் தான் முன்வர வேண்டும் என்றார்.
தலவாக்கலை பி. கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here