மலையக தொழிலாளர் முன்னணி ஒருபோதும் தன் தனித்துவத்தினை இழந்து செயற்படாது என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் க.சுப்பிரமணியம் தலவாக்கலையில் 05ம்; திகதி அன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்
இவர் மேலும் தெரிவிக்கையில் மலையக மக்கள் முன்னணியும், மலையக தொழிலாளர் முன்னணியும் பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் அல்ல. ஆழமான அடித்தளத்துடனும், அர்த்தமுள்ள கொள்கைகளுடனும் நேர்மையான நோக்கத்தோடும் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பே இது.
ஆயிரமாயிரம் இளைஞர்களின் இரத்ததுளிகளினாலும் மக்களின் வியர்வைத்துளிகளினாலும், தியாகத்தினாலும் அர்ப்பணிப்புகளினாலும் அங்குலம் அங்குலமாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பினை விற்பனை பொருளாக்குவதற்கு எமது அங்கத்தவர்கள் ஒருபோதும் விலைப்போக மாட்டார்கள்.
சிறைவாழ்க்கையும் அடக்குமுறையும் எமது ஆதரவாளர்களை விடாது துரத்திய காலங்களில் துன்பங்களையம் துயரங்களையும் மாத்திரமே அனுபவித்து எமது இளைஞர்கள் வளர்த்தெடுத்த அமைப்பு எமது ஸ்தாபகத் தலைவரின் மறைவுக்கு பின்னரும் அதே சக்தியோடு உயிர் வாழ்வதற்கு காரணமே இங்குள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களினதும் உண்மையான பங்களிப்பே ஆகும்.
ஒட்டு மொத்த மலையக சமூகத்தினதும் சமூக அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட எமது அமைப்பு மலையகத்தின் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒரு போதுமே தயங்கியதில்லை.
மலையக மட்டத்தில் மட்டுமல்லது தேசிய சர்வதேச மட்டங்களிலும் இணைந்து செயற்படுவதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ஒருபோதுமே தயக்கம் காட்டியதில்லை. ஒவ்வொரு அமைப்பும் த்ததமது சுய அடையாளத்தை அழிக்காமல் பொதுவான வேலைத்திட்டத்தில் ஒன்றினைவதுதான் எமக்கு பெருமை சேர்க்குமே தவிர அதைத்தவிர்ந்த வெறெந்த செயற்பாடுகளும் எமது பலவீனத்தையே எடுத்துக்காட்டும்.
துணிவான தெளிவான அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அமரர் சந்திரசேகரனும் சதிகளையும் நம்பிக்கை துரோங்களையும் சந்திக்காமல் இல்லை. அவ்வாறானவர்களில் எல்லாம் அவர் தன்னம்பிக்கையை மாத்திரம் கைவிடவில்லை. தனிமனிதனாக கைவிடப்பட்டாலும் நான் எனது அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பேன் என்று கூறுவார்.
இப்போதும் அதையே நாம் கூறுகின்றோம். எமது கட்சிக்கு எதிராக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ மேற்கொள்ளப்படும் எந்த சவாலையும் கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும்வரை எதிர்த்து நின்று கட்சியைக் காப்பாற்றுவான் என தெரிவித்தார்.
ஆக்கரப்பத்தனை நிருபர்