மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஏழு பேர்ச்சுக்கு அதிகமான நிலத்தை வழங்க நடவடிக்கை; தலவாக்கலையில் ஜனாதிபதி!

0
178

மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில், 7 பேர்ச்க்கும் அதிகமான காணியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “சேவல்” சின்னத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் “வெற்றிலை” சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 28.01.2018 அன்று ஞாயிற்றுகிழமை காலை 02 மணிக்கு தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பெருந்திரளான மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பிரித்தானியரின் காலணித்துவ காலப்பகுதிக்கு பின் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றி வந்த தலைவர் மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை எவராலும் அழிக்க முடியாது.

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மற்றும் எங்கெல்லாம் இவரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளதோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இவரின் பெயரை மீண்டும் புதுப்பிக்க பணிந்துரை செய்துள்ளேன்.

மலையக பெருந்தோட்ட மக்கள் துன்பங்களையும் துக்கங்களையும் கொண்டே வாழ்ந்து வருகின்றனர். சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்ததாக இல்லை. ஆனால் மலையக மக்கள் மட்டுமின்றி நாட்டில் அனைத்து இன மக்களாலும் போற்றப்பட்ட தலைவர் மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் இவரின் உன்னத சேவையால் இன்று மலையக மக்கள் ஓர் அளவுக்கு தங்களை அபிவிருத்தியிலும் வாழ்க்கை தரத்திலும் உயர்த்திக்கொண்டுள்ளனர்.

நாட்டுக்கு வெளிநாட்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் இந்த மக்களின் உழைப்பை கடந்த காலங்களில் இவர்களை நிர்வாகம் செய்யும் பெருந்தோட்ட நிர்வாகங்கள் சூறையாடி வருகின்றனர்.

உழைப்பின் ஊடான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள் இம்மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுத்து செல்லவில்லை.

முழுமையான அரசாங்கத்தை கொண்டு செலுத்தும் நான் மலையக மக்களிடத்தில் இன்று உருவாகியுள்ள போதை பொருள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அதை மலையக பிரதேசங்களில் பாவனைக்கு உள்ளாக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றேன். அத்தோடு இதன் வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை நான் எடுப்பேன்.

உலக நாடுகளில் இலங்கையின் தேயிலைக்கு தனியான மதிப்பு உள்ளது. இந்த மதிப்பினை மாசுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் சில வியாபாரிகள் தரமான தேயிலை உடன் தரம் குறைந்த தேயிலையை கலந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

இது சம்மந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் பணித்துள்ளேன். தேயிலையின் தரத்தை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்தால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதுடன், தேயிலையை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பொருளாதாரத்தில் பாதிக்கப்படுவார்கள் ஆகையால் தேயிலை மீள் ஏற்றுமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

கடந்த சில வருடங்களாக தேயிலை அபிவிருத்தியை முடக்கும் வகையில் தேயிலை காணிகளை முறையாக பராமரிக்காது காடுகளாக்கப்பட்டு வந்துள்ளன.

அதுபோன்று தெங்கு செய்கை மிளகு செய்கை என பல பயிர்களிலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த பயிர் செய்கைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கையை எடுக்கும்.

நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், தலவாக்கலை, கந்தபளை போன்ற நகரங்களை புதிய நகரங்களாக்குவோம். அதேபோன்று மலையகத்தின் சூழல் மற்றும் இயற்கை நீர் வழங்கல் அனைத்தையும் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான மாற்றங்கள் ஊடாக மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலும் நானும் திட சங்கற்பம் பூண்டுள்ள நிலையில் மலையக மக்கள் தலைவராக ஏற்றுள்ள ஆறுமுகன் தொண்டமானின் சக்தியை பலப்படுத்த வேண்டும். அதற்காக நாடாளவீய ரீதியில் 347 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னங்களான கை மற்றும் வெற்றிலை ஆகியவற்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடும் சேவல் சின்னத்தை வெற்றியடைய செய்ய நீங்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 10ம் திகதிக்கு பின் சிறந்த பிரதேச சபைகளை நாம் உருவாக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் பிரதேச சபைகளுக்கு நகர மற்றும் மாநகர சபைகளுக்கு வெற்றியீட்டுபவர்களை எனது பிரதிநிதிகளாக நான் முன்னெடுத்து அவர்களுக்கு அபிவிருத்திக்காக இலட்ச கணக்கில் பணம் வழங்க தயாராக உள்ளேன் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here