காணியும் குடியிருப்புகளும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நுவரெலியா மேதின கூட்டத்தில் சட்டத்தரணி கா.மாரிமுத்து மலையக வரலாறு 200 வருடங்களைக் கடந்த போதிலும் பெருந்தோட்டச் சேவையாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் என்பது மறுப்பதற்கில்லை.
பெருந்தோட்டங்களின் செழிப்புக்கும் உற்பத்திக்கும் முதுகெலும்பாக நின்று உழைத்தவர்கள்
பெருந்தோட்ட சேவையாளர்களே. ஆனால் அவர்களின் வாழ்வியலில் விமோசனமும் விடிவும் இதுவரையும் ஏற்படவில்லை. எனினும் இந்த மேதினத்தின் பின்னர் அவர்களுக்கான காணியும் தனித்தனி
குடியிருப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
அப்படியே அவர்களது கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதச் சம்பளமும் உயர்வடைய கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து நுவரெலியாவில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இ.தொ.கா வின் 79வது மேதினம் நுவரெலியா மாநகரில் இ.தொ.கா தலைவரும் பொதுச் செயலாளரும்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மலையக பெருந்தோட்டங்களின் தற்போதைய நிலைமை காடுகளாக மாறியுள்ளன. தொழிலாளர்களுக்கு இலகுவாக தமது அன்றாடம் தொழில் செய்ய முடியாத நிலையும் தோற்றுவித்துள்ளது.
இதனால் விஷ ஜந்துக்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனோடு தோட்டங்களிலேயே படித்து விட்டு வேலை வாய்ப்பின்றி அவதியுறும் இளைஞர் யுவதிகளுக்கு தாம் வதியும் தோட்டங்களிலேயே அவரவர் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆகவே தான் இவை யாவற்றுக்கும் ஒரு தீர்வு காணும் பொருட்டு எதிர்வரும் 16ம் திகதி தொழில்
அமைச்சில் விரிவான பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இப்பேச்சு வார்த்தையில் இ.தொ.கா தலைவர்
பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இதில் கலந்து கொள்ளவுள்ளார் என்றார்.
எஸ்.தேவதாஸ்