மலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும்!!

0
130
மலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும்
– மலையக தயாகிகள் நினைவேந்தல் நிகழ்வில் திலகர் எம்.பி

மலையக மக்கள் இந்த நாட்டில் எழுச்சி பெற எத்தனையோ உயிர்த்தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அத்தகைய தியாகிகளை தொழிற்சங்க போராட்டங்களுக்கு வெளியேயும் தேடிப்பார்க்கும் காலம் இப்போது தோன்றியிருக்கிறது. இறுதி யுத்தத்தின்போது வன்னியில் கொல்லப்பட்ட மலையக மக்கள்  மாத்திரமல்ல கொள்கை பற்றிய தெளிவில்லாமலேயே விடுதலை இயக்கங்களில் இணைந்து உயிர்விட்ட எத்தனையோ மலையக உயிர்கள் மௌனமாக மறைக்கப்பட்டுவிட்டது. ஈழ யுத்தப்பின்னணியில் அவுஸ்திரேலியா முதல் கனடா வரையான வளர்ச்சி கண்ட நாடுகள் மாத்திரமல்ல மலையகமும் இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடமாக இருந்துள்ளது. அதிலும் கூட மலையக மக்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். மலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான வெற்றி கிட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின மலையக பிராந்தியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு ஹட்டனில் நடைபெற்றது. அவ்வமைப்பின் கொள்கைபரப்பு செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், தொழிற்சங்கவாதியும் எழுத்தாளருமான தவசி அய்யாத்துரை, சமூக ஆய்வாளர் பெ.முத்துலிங்கம், அரசியல் செயற்பாட்டாளர் அ.லோரன்ஸ், தொழிற்சங்க  செயற்பாட்டாளர் வயலட் மேரி, ஆய்வாளர் ஏ.ஆர்.ந்ந்தகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையக மக்களின் மண்ணுரிமை போராட்டத்தில் உயிர்நீத்த சிவனு லட்சுமனன் நினைவு நாளில் மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த ஈரோஸ் ஐனநாயக முன்னணியினர், ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடக்கும் விழாவிற்கு வருமாறு அழைத்தபோது ஆவலோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால், திலகர் வருகிறார் என்றதும் ஹட்டன் நகரசபை மண்டபம் தன் கதவுகளை மூடிக் கொண்டதாம். அதே நேரம் அவர்கள் மாற்றிடத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள். இது மாற்றிடம் இல்லை. இதுதான் எங்கள் தந்தையின் வீடு. இன்றைய இந்திரா விருந்தக மண்டபம் தான் எங்கள் மலையகத் தந்தை கோ.நடேசய்யரின் அன்றைய அலுவலகம்.

அவர்தான் மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கவாதி, அவர்தான் மலையகத்தின் முதலாவது அரசியல்வாதி, அவர்தான் மலையகத்தின் முதலாவது பத்திரிகையாளர், அவர்தான் முதலாவது நாடகாசிரியர், அவர்தான் முதலாவது சிறுகதை ஆசிரியர். அந்த பெருமகனும் மலையக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தியாகி என்பதன் அடிப்படையில் அவரது அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடக்க ஏற்பாடானது நிகழ்வின் அர்த்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. “புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களை போற்றும் இரங்கல் புகல்மொழியில்லை” என புதைக்கப்படுகின்ற எங்கள் மக் களின புதைகுழி மேட்டிலோர் காணகப்பூவை பறித்துப் போடுவார் இல்லையே என கவலைப்பட்ட கவிஞன் சி.வி.வேலுப்பிள்ளை பாடிய அந்த கவிதையின் அரத்தங்களைப் புரிந்துகொண்டு, அவரின் அடுத்த வரிகளான “இங்கெவர் வாழவோ… தன்னுயிர் தந்தனன்” என்ற தொனிப் பொருளில் மலையக தியாகிகளை நினைவு கூரும் இந்த நிகழ்வில் மலையக மக்களின் எழுச்சிக்காக உயிர் நீத்த அத்தனைத் தியாகிகளுக்கும் எனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரம், இன்று மேதினமானது கொண்டாட்டடத்துக்குரிய நாளாக மாறிவிட்ட நிலையில் அந்த உலகச் செல்நெல்றியை மாற்ற அங்கலாய்த்துக் கொண்டிராமல் மலையகத்தில் கட்சிகள், தொழிற்சங்ககள் கொண்டாடுகின்ற அந்த நாளை அவர்களிடம் அப்படியே விட்டுவிட்டு உணர்வுப்பூர்வமாக மலையக தியாகிகளை நினைவு கூரும் தினமாக மேதினத்தை அனுஷ்டிக்கும் தீர்மானத்தை இன்றைய ஹட்டன் கூட்டத்தில் நிறைவேற்றுவோம். கட்சி பேதம் மறந்து அனைவருமே பங்கேட்கும் ஒரு பொது நிகழ்வாக அதனை அமைத்துக்கொள்வோம். அதனை சிவில் சமூக அமைப்புகள் ஒழுங்கமைக்கட்டும்.என்னைப் போன்ற ஆர்வலர்கள் அத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் எங்கள் கொண்டாட்டங்களுக்குச் செல்கின்றோம்.

மேதினம் தோற்றம் பெற்ற நாளில் இருந்து இன்றைய நாளில் அதன் அர்த்தம் மாறுபட்டுச் சென்றுள்ளது. தொழிற்சங்ககள் அரசியல்மயப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.ஆனால், மலையகத்தில் அது ஆச்சரியமில்லை, ஏனெனில், வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு அரசியல் உரிமை மறுக்கப்பட்ட மலையக சமூகம் தொழிற்சங்கத்தையே தனது அரசியல் சக்தியாகவும் கொண்டது. இன்றுவரை மலையக அரசியலின் ஆணிவேராக

அதுவே இருந்து வருகிறது. இதுதான் எனது மேதின உரையின்போதான செய்தி. நான் அங்கே

வேறு எந்த தில் பற்றியும் பேசவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக ஊடகங்கள் தில் விடயத்துக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை கொள்கைசார், மேதினப் பிரகடனம் சார்ந்த விடயங்களிக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.

FB_IMG_1526095019739

 

இதுவெல்லாம் உலக செல்நெறியில் இன்று உருவாகிவிட்டுள்ள அம்சங்கள். எல்லோரையும் படமெடுக்க ஒருவர் கெமராவுடன் நின்ற காலம் போய் இப்போது எல்லோரும் கேமராவை கையில் தூக்கிக்கொண்டு யார் யாரைப் படமெடுப்பது என்று தெரியாமல் அவர் அவர் தன்னைத்தானே படமெடுத்து ப்ப்லிஷ் பண்ணிக்கொள்ளும் செல்பி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறொம். விவசாயம் செய்து பசுமைப் புரட்சியையும், மீனைப்பிடித்து நீலப்புரட்சியையும், தொழிற்சாலைகள் அமைத்து கைத்தொழில் புரட்சியையும் கண்ட இந்த மானுடம் இப்போது தகவல் புரட்சி யுகத்தில் நிற்கிறது. இப்போது எல்லோரும் தகவலைச் சொல்லிவிடும் அவசரத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று நான் நிற்கும் மேடை உணர்வுபூர்வமானது.எனது தொழிற்சங்க  வாழ்க்கை தொழிலாளர் தேசிய சங்ககத்தோடு ஆரம்பிக்கிறது எனில் அதற்கு அடிப்படையாக அமைந்தது எனக்கும் மாத்தளை ரோகினிக்குமான இலக்கிய உறவு காரணமாகியது. சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதையுடன் எனதுரையை ஆரம்பித்தேனே அந்த வரிகளை தனது நூல் சேகரிப்பில் தந்து என்னை ஆற்றுப்படுத்தியவர் தலைவர் அய்யாத்துரை. எனவே தான் எனதுரைக்கு அவரை தலைமை ஏற்குமாறு அழைத்துக் கொண்டேன். அதேபோல ஈரோஸ் சார்பாக ஜீவன் பேச அழைத்தபோது ஆவலாக ஏற்றுக் கொண்டதும் அரசியலில் நான் ஈரோஸின் சுண்டுவிரல் பிடித்தே உள்நுழைந்தேன் என்ற உணர்வினால்தான். அன்றிருந்த ஈரோஸ் வேறு. இன்றிருக்கும் ஈரோஸ் வேறு. ஆனாலும், மலையக அரசியல் குறித்த பார்வையை எனக்கு ஈரோஸ் வழங்கியது என்பதை மதிப்போடு இங்கே பதிவு செய்கிறேன். இவர்கள் இருவருக்கு மேலாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் எனக்கு பாணூட்டி வளர்த்த ஆசான் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.அவர் என்னைக் கண்டதும் ஆசான் என்ற உரிமையோடு ஒரு கேள்வியைக் கேட்டார். வீடு கட்டுவதைத் தவிர நீங்கள் வேறு எந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த இருக்கிறீர்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஒரு மாணவனாக அவருக்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்ட உள்ளேன்.

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்தோட்டங்களின் எண்ணிக்கையை ஒருபுறம் வையுங்கள் மஸ்கெலியாவில் அப்படியொரு கிராமத்திற்கு எங்கள் மலையகத் தந்தை கோ.நடேசய்யர் பெயரைச் சூட்டும் வாய்ப்பு எஙகள் அரசியல் ஊடாக கிடைத்ததே. இந்த மாதம் கந்தையாபுரத்தை ஹட்டனில் ஆரம்பிக்கிறோமே அதுவே எமது வெற்றி. உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த கண்டி, கந்தலா தோட்ட தொழிலாளர்களான வீராசாமி , வேலாயுதம் பெயரில் அங்கே வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, முல்லோயாவில் கோவிந்தன் புரத்திற்கு நான் அடிக்கல் நாட்டிவைக்க அங்கே ஐம்பது வீடுகள் அந்த தியாகி பெயரில் கட்டப்படுகிறதே அது நாம் கண்ட வெற்றி.  எனவே எமது வீடைம்ப்புத் திட்டத்தை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்காது எண்ணக்கரு அடிப்படையில் பாருங்கள். இங்கே தியாகிகள் நினேவேந்தப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை நிலைநிறுத்தி வருகிறோம். நான் சொன்னது போல போராட்ட வடிவங்கள் மாறிப்போனதனால் எமது தியாகிகள் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டுவரும்போது கிராமத்துக்கு ஒரு பெயர் வைக்கும் கலாசாரத்தை உருவாக்கினோமானால், அதுவே தியாகிகளுக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாகும்.அதை நோக்கியதே எங்கள் அரசியல் பயணம்.

தவிர்க்க முடியாத வகையில் எங்களது எல்லாப்பணிகளுக்கும் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க முடிவதில்லை.  கடந்த இரண்டாண்டு காலமாக பாராளுமன்ற குழு அறையில் போராடி பெருந்தோட்டத்துறை சுகாதார முறையை மாகாண அரசாங்கங்கள் பொறுப்பேற்கும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, பிரதேச சபைகள் சட்டத்திருத்தம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது அதுவே என் முதலாவது பிரேரணை . துரதிஷ்டவசமாக இதற்கெல்லாம் ரிப்பன் வெட்ட முடியாது போனதறால் பலருக்கு தெரியாமல் போகலாம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பாதைகள் சீரில்லாமை பற்றி செய்தி சொல்லியே காலம் கடத்தும் ஊடகங்கள் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. காரணம் அந்த வீதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமில்லை. அப்படி இருக்கும்போது நானே அமைச்சரானாலும் அந்த வீதியை அமைக்க நிதி ஒதுக்க முடியாது. எனவேதான், பெருந்தோட்டத்துறை வீதிகளை அரசுக்கு பொறுப்பேற்று வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழ் கொண்டுவருமாறு விரைவில் பாராளுமன்றில் பிரேரணை முன்வைக்கவுள்ளேன். அதற்கும் ரிப்பன் வெட்ட முடியாது. ஆனால், அடுத்து வரும் யாரும் வீதியை இலகுவாக செப்பனிடலாம். இவ்வாறெல்லாம், போராடுவதற்கு நான் எனது கொள்கை கோட்பாடுகளை மனதிற்குள் வைத்துக் கொண்டு தந்திரோபாய அடிப்படையில் அரசியல் களத்தில் இறங்கியமையே காரணம். எனது ஆசானின் எதிர்பார்ப்பு நான், வைத்தியராக, எஞ்சினியராக, சட்டத்தரணியாக வந்து குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்வதை பார்ப்பதாக இருக்கலாம். அப்படி வருவது ஒன்றும் எனக்கு ஒன்றும் சிரமமான விடயமுமல்ல. ஆனால், நான் கற்ற கல்வியை பெற்ற அனுபவத்தை அரசியலில் இறக்கி இன்று எதிரியை அவனது பாதியிலேயே சந்திக்கிறேனே, இதற்காக பலமுறை மாடிகளுக்கு அழைத்து விசாரிக்கப்பட்டிருக்கின்றேன். என்மடியில் அமர்ந்து ஏடு தொடக்கம் நடந்துகொண்டிருந்த என்மகளை இறக்கிவைத்துவிட்டு  விசாரணைக்கு அழைக்கப்பட்டேனே. அந்த தியாகம் எத்தகையது எனவே நானும் கூட தியாகிதான். வீட்டிற்குள் படுத்துக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும், கொமடில் உட்கார்ந்து கொண்டும். முகநூலில் ” என்ன செய்தீர்கள் ” என கொமெண்டு போடும் முகம் மறைத்த போராளிகளுக்கு மத்தியில் எதிரியை அவனது வீதியிலேயே எதிர் கொள்ளும்., களத்தில் இறங்கி அரசியல் செய்யும். ஒவ்வொருவரும் தியாகியே. அவர்கள் எதைஎதையோ இழந்துதான் இதனைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

எனவே, எமது போராட்டங்களும் வடிவம் மாறிக்கொண்டிருக்கிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக மாத்திரம் உயிர்நீத்தவர்களை உள்ளடக்கிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் த.அய்யாத்துரை ( மாத்தளை ரோகிணி) எழுதிய “உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்” நூலுக்கு வெளியேயும் நாம் தியாகிகளை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. மலையக மக்கள் இந்த நாட்டில் எழுச்சி பெற எத்தனையோ உயிர்த்தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அத்தகைய தியாகிகளை தொழிற்சங்க போராட்டங்களுக்கு வெளியேயும் தேடிப்பார்க்கும் காலம் இப்போது தோன்றியிருக்கிறது. இறுதி யுத்தத்தின்போது வன்னியில் கொல்லப்பட்ட மலையக மக்கள்  மாத்திரமல்ல கொள்கை பற்றிய தெளிவில்லாமலேயே விடுதலை இயக்கங்களில் இணைந்து உயிர்விட்ட எத்தனையோ மலையக உயிர்கள் மௌனமாக மறைக்கப்பட்டுவிட்டதன. 1991 ஆம் ஆண்டு வன்னியில் உயிர் நீத்த கெப்டன்.பூங்குயில் மடகொம்பரை மண்ணில் பிறந்த என் சொந்த அத்தை மகள் சாந்தினி என்கின்ற உண்மையை இன்று பதிவு செய்துவைக்கிறேன். இதுபோல இழக்கப்பட்ட எத்தனையோ மலையக உயிர்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஈரோஸ் ஜனநாயக முன்னணி அவர்கள் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் விழிப்புணர்ச்சி கழகத்தின் ஊடாக அத்தகைய ஆய்வுகளையும், இத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யவேண்டும். ஈழ யுத்தப்பின்னணியில் அவுஸ்திரேலியா முதல் கனடா வரையான வளர்ச்சி கண்ட நாடுகள் மாத்திரமல்ல மலையகமும் இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடமாக இருந்துள்ளது. அதிலும் கூட மலையக மக்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். மலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

 

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here