மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட தொழில்சார் உரிமைகளையும், நலன்புரி விடயங்களையும் விட்டுக்கொடுப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டுக்கான செயலமர்வு, பெருந்தோட்டக் கம்பனிகள் உட்பட பெருந்தோட்டத்துறைக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாரத் அருள்சாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையக பகுதிகளில் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் 600 மில்லியனை ஒதுக்கியுள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் உதவியுடன் மலையக மக்கள் வாழும் 12 மாவட்டங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க 2000 மில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். அதனை வழங்க கம்பனிகள் முன்வர வேண்டும் எனவும் பாரத் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் மலையக மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதாரம் மேம்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தவும், போசாக்கு மட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாரத் அருள்சாமி மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, மலையக பகுதிகளில் உணவு பாதுகாப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போசாக்கு மட்டம் அவதானமான நிலைக்கு சென்றுள்ளது. இதனை கருத்திற் கொண்டு பேராசிரியர் ஜயசிங்கவின் ஆய்வு அறிக்கைக்கை அமைவாக பெருந்தோட்ட பகுதிகளில் பயிர் செய்யப்படாத நிலங்களை தோட்ட கூட்டுறவு சங்கத்தின் ஊடாக பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் அங்கு வாழும் மக்களின் பங்களிப்போடு நவீன மயமாக்கப்பட்ட விவசாயத்துறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான விளக்கங்களுக்கு பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.
அதேவேளை மேற்படி செயலமர்வில் வயம்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, தேயிலை ஆராய்ச்சி சபையின் நிறைவேற்று பணி கலாநிதி டாக்டர் மோட்டி, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகள், அரச பெருந்தோட்ட யாக்கங்களின் தலைவர்கள், தேயிலை ஏற்றுமதியாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
(க.கிஷாந்தன்)