மலையக மக்களுக்கு நாம் முன்னெடுத்த சேவைகளை சொல்லியே வாக்கு கேட்டோம்; ஸ்ரீதரன் பெருமிதம்!

0
132

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சேவையே காரணமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

20.02.2018 அன்று இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு இந்த மாவட்டத்தில் 165592 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான திகாம்பரம், மனோகணேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னெடுத்த சிறந்த மக்கள் சேவையினால் நுவரெலியா மாவட்ட மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

அவர்களுக்கு இந்தச்சபையின் ஊடாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதன் முறையாக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வெற்றிக் கொள்ள முடிந்துள்ளது. அத்துடன் நுவரெலியா மாநகரசபை, நுவரெலியா பிரதேசசபை, மஸ்கெலியா பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை, அட்டன்;- டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை ஆகிய சபைகளை ஐக்கிய தேசிய கட்சி ஆளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதோடு ஏனைய சபைகளின் ஸ்தரத்தன்மைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவும் அவசியமாகியுள்ளது.

நல்லாட்சி காலத்தில் மலையக மக்களுக்கு நாம் முன்னெடுத்த சேவைகளை எடுத்துக்கூறியே நாம் மக்களிடம் வாக்குகளைப் பெற்றோம். ஆனால் ஒரு சிலர் ஏழைத் தொழிலாளர்களிடம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டும், கையூட்டல்களை வழங்கியும் அவர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்துள்ளனர். தேர்தலுக்கு முதல் நாள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மதுபானசாலைகளில் மதுபானபோத்தல்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டமைக்கும் அந்த மதுபான போத்தல்களை விநியோகித்தமைக்கும் யார் காரணம் என்பதை இன்று மக்கள் உணர்ந்து உள்ளனர். தேர்தலுக்குப் பிறகு யாரிடம் போய் ஒட்டிக்கொள்ளலாமென்று அங்கேயும் இங்கேயும் தாவியவர்கள் யார் என்பதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் பதவி மோகத்துக்காக வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பதவிகளைப் பணம் கொடுத்து பறித்துக்கொள்வதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். எமது அமைச்சர்களின் சேவைகள் மக்களுக்காக முன்னெடுக்கப்படும். எமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக மக்களுக்கான எமது சேவைகள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படும் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here