மலையக மக்கள் தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாற சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமையட்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் வாழ்த்துச் செய்தி
நம்பிக்கையும், நல்லெண்ணமும் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உண்மையான அத்திவாரம் ஆகும். எனவே, மலையக மக்கள் சொந்தக் காலில் நின்று தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாறுவதற்கு மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணி செயலாளர் நாயகமும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
ஒவ்வொரு புத்தாண்டையும், பண்டிகையையும் பெரும் எதிர்பார்போடும், உற்சாகத்தோடும் நாம் கொண்டாடி வருகின்றோம். எனினும், எதிர்பாராத நிகழ்வுகள் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இத்தகையை இனவாத சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்க நாம் புரிந்துணர்வுடன் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் இனவாதக் கருத்துக்களை பரப்பி குளிர்கைவதே சிரின் குறிக்கோளாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நாட்டின் நலன் பற்றிய கவலை எதுவும் கிடையாது. மாறாக மக்கள் மத்தியில் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்து அமைதியை சீர்குலைத்து வருகின்றார்கள்.
எனினும், இவற்றை முறியடித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழுவீச்சுடன் செயற்பட வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. ஆகவே, மலர்ந்துள்ள புத்தாண்டு அனைத்து சூழ்ச்சி களுக்கும் முற்றுப் புள்ளி வைத்து, மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வளம் சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
( மஸ்கெலியா நிருபர் )