மலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகவும், காணி உரிமை வழங்கக் கோரியும் வவுனியாவில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்பு இணைந்து இக் கண்டனப் பேரணியை மேற்கொண்டன. வவுனியா, சிந்தாமணி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பித்த பேரணி பசார் வீதி வழியாக பிரதேச செயலகம் வரை சென்றது.
மலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் முகமாக பார்த்தீபன் என்ற நபர் ஒருவர் துண்டுபிரசுரங்களை ஒட்டியமைக்கு எதிராகவும், மலையக மக்கள் வசிக்கும் ஓமந்தை, மகிழங்குளம் பகுதி மக்களுக்கான காணி உரிமை வழங்கப்படாமையைக் கண்டித்தும் அம் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இந்திய வம்சாவளி மக்களாகிய நாமும் ஒரு தேசிய இனம். எம்மை இழிவுபடுத்தி புறக்கணித்து பல இடங்களிலும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. எம்மை இழிவுபடுத்துபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எமக்கான காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் இதன்போது அம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்திற்குள் சென்று உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன் அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததுடன் பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களிடமும் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
இதன்போது மலையக மக்களை இழிவுபடுத்தி துண்டு பிரசுரத்தை வெளியிட்டவராக கருதப்படும் பார்த்தீபன் என்ற நபர் அவ்விடத்திற்கு வந்து கண்டனப்பேரணியில் ஈடுபட்ட மக்களை புகைப்படம் எடுத்த போது அம் மக்கள் பார்த்தீபன் உடன் முரண்பட்டு அவரை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டனர். இதன்போது கடமையில் இருந்த பொலிசார் பார்த்தீபனை பிரதேச செயலக அலுவலகத்திற்குள் விட்டு பாதுகாத்தனர். மக்கள் பிரதேச செயலக அலுவலகத்திற்குள் புகுந்து பார்த்தீபனுடன் முரண்பட்டு மீண்டும் தாக்க முற்பட்டனர். இதனையடுத்து மேலதிக பொலிசார் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டதுடன், பார்த்தீபனை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்ல முற்பட்டனர். இதன்போது வாகனத்தை செல்ல விடாது மக்கள் குழப்பம் விளைவித்தமையால் பிரதேச செயலகத்தின் பின் வாசல் வழியாக பார்த்தீபனை பொலிசார் தமது வாகனத்தில் அழைத்துச சென்றனர். இக்குழப்பம் காரணமாக பிரதேச செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் பதற்றநிலை காணப்பட்டது. மக்கள் தம்மை இழிவுபடுத்திய நபரை பிரதேச செயலகம் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டி பிரதேச செயலக வாயிலை மறித்து கோசம் எழுப்பினர்.
அவ்விடத்திற்கு மீண்டும் வந்த பிரதேச செயலாளர் பார்த்தீபன் தமது அலுவலகத்தில் பணி புரிவதில்லை எனவும் அவரை தாம் பாதுகாக்கவில்லை. பொலிசாரே உள்ளே விட்டனர் எனவும் தெரிவித்ததுடன், மக்களது காணிப்பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.