மஸ்கெலியாவில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனின் உருக்கமான மடல்!

0
153

மலையகத்தில் மாற்றம் வேண்டும் அங்கு வாழும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் எம்மில் எவருக்கும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை, புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் எமது வாழ்வில் ஒரு புதுயுகம் பிறக்கும் என புது தெம்பு பிறந்தது, அதே போல மலையகத்தில் நீண்ட காலமாக கோலோச்சி வந்த அரசியல் தலைமையும் வீழ்ந்தது, அங்கு தேனும் பாலும் வழிந்தோடும் என்ற கனவு தொடர்ந்தது, ஆனால் இன்று அதற்கு மாறான ஒரு சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர் வாழ்வு அமைந்து இருப்பது வெளி உலகுக்கு தெரியவில்லை.

தோட்ட தொழிலாளர் தோட்ட கம்பெனிகளின் கீழ் அடிமைப்பட்டு கிடப்பதை யார் கண்டு கொள்வார்கள்? 18 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே ஒரு நாள் சம்பளம் இல்லையெனில் அரைநாள் சம்பளம் இதிலும் மாதத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை, அரை வயிற்றுக்கே அல்லல்படும் அவலம் இதை இந்த மலையக தலைமைகள் கண்டு கொள்கின்றனவா? இல்லை, இல்லை அவர்கள் தமது போட்டி அரசியலுக்குள் மட்டும் முடங்கி போய் இருக்கிறார்கள், மக்களின் வாழ்வு மட்டும் தாழ்ந்து போய் இருக்கிறது.

நீங்கள் திறக்கும் தோட்டப்பாதைகளும் அங்கு கட்டும் வீடுகளும் அற்புதமானதுதான் அதற்கு முன்னர் அந்த மக்களின் வயிற்றை அவதானித்தீர்களா ? கட்டிய வீட்டுக்குள் பட்டினியுடன் படுத்து கிடக்கும்   தொழிலாளியின் துயரம் பற்றி சிந்தித்தது உண்டா? அன்றாடம் வாழ்வுக்காக போராடும் ஒரு தொழிலாளியின் துயரத்தை கண்டு கவலை கொண்டது உண்டா? மலையகத் தலைமைகளே முதலில் கான்க்ரீட் பாதைக்கு செலவு செய்யும் அந்த பணத்தை அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன் படுத்துங்கள், விவசாய துறையை ஊக்குவியுங்கள், சுய தொழில் வாய்ப்பை மேம்படுத்துங்கள், இதுதானே உண்மையில் மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமை, பாலத்துக்கு கல் வைப்பதால் அவனது பசி மாறிவிடுமா? முதலில் மக்களை செம்மைப் படுத்துங்கள் பின்னர் பாலத்துக்கு கல்லை வைக்கலாம்?

கட்டிய வீட்டுக்குள் பட்டினியோடு படுத்து உறங்கும் ஒரு தொழிலாளி குடிசையில் வாழ்ந்தாலும் கோபுரத்தில் வாழ்ந்தாலும் ஒன்றுதானே” வாழ்வாதாரம் இல்லாத புறக்கணிக்கப்பட்ட ஒருவனுக்கு வீதியும் ஒரு வீடுதான், தனி வீட்டில் படுத்துக்கொண்டால் பட்டினி தீர்ந்துவிடப்போவதில்லை, தனி வீடுகளில் குடியேறிய அனைவரும் அந்த லயத்தில் உள்ள பெட்டி படுக்கையுடன்தான் அங்கு இடமாறியுள்ளனர் ஆனால் அடிப்படை பிரச்சினை அங்கு அப்படியேதான் உள்ளது.

மக்களின் மனங்களை வெல்லாத எந்த தலைமையும் நிலைத்து இருந்த வரலாறு கிடையாது, அடிப்படை பிரச்சினைகளை ஆராயுங்கள் புதிய பானைக்குள் பழைய கஞ்சி என்பது போலத்தான் புதிய வீட்டுக்குள் பழைய வாழ்க்கை, இதுவே இன்றைய மலையகத்தின் உண்மை நிலை புரிந்து கொள்ளுங்கள் மலையக அரசியல் தலைமைகளே காலங்கள் வெகு தூரத்தில் இல்லை, கண்ணெதிரே தான் உள்ளுராட்சி தேர்தலும் வந்து கொண்டு இருக்கிறது.

மலையகத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளி மகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here