மாகாணசபை தேர்தல் சட்ட திருத்தங்கள், எமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றிகள் அமைச்சர் மனோ கணேசன்!

0
124

மாகாணசபைகள் சட்டத்துக்கு கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முறையில் எமது ஒற்றுமைக்கும், கூட்டணிக்கு வெளியே ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றிகள் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கேட்போர் கூடத்தில் மட்டக்குளிய வட்டார செயற்குழு கூட்டம், வட்டார அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மாகாணசபைகள் சட்டத்துக்கு புதிய சட்ட திருத்தம் வருகின்ற போது, அரசாங்கத்துக்கு உள்ளேயே இருந்தபடி கூட்டாக பல திருத்தங்களை நாம் முன் வைத்தோம். அவை ஏற்றுக்கொள்ளபட்டபின் சமூகமாக வாக்களிப்பு நடைபெற்றது. இதன்மூலம் ஒட்டு மொத்தமான தமிழ் பேசும் மக்களுக்கு புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் வரவிருந்த ஆபத்து குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த பணிகளை நாம் கூட்டாக செய்து முடித்துள்ளோம்.

தொகுதி, விகிதாசார தெரிவுகளுக்கு இடையில் இருக்கின்ற கணக்கீடு 60:40 என்பதில் இருந்து 50:50 என்பதற்கு உயர்த்தப்பட வேண்டும். தொகுதி எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட இனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவின் முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். அந்த குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அது பிரதமர் தலைமையிலான மீளாய்வு குழுவிடம் சமர்பிக்கப்பட வேண்டும். அந்த குழுவிலும் பிரதான இனப்பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். தொகுதி எல்லை மீள்நிர்ணயத்தின் போது அவசியமானால், சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவங்களை கருத்தில் கொண்டு சிறு ஜனத்தொகை கொண்ட தொகுதிகளும், பல் அங்கத்தவர் தொகுதிகளும் அமைக்கப்பட வேண்டும், ஆகிய சிறுபான்மை கட்சிகளின் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவற்றின் மூலம் பழைய விகிதாசார தேர்தல் முறையிலிருந்து கலப்பு முறைக்கு மாறும் போது, வரவிருந்த ஆபத்துகள் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலத்தின் மூலம், அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியளவில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறும். இந்த புதிய சட்டத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருட நடுப்பகுதியில் நடைபெறும்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் தொகுதிகளை அமைக்கும் பணிகள் இப்போது எம்முன் இருக்கின்றன. முதலில் தொகுதி எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட இனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பதில் நாம் கவனம் செலுத்துவோம். அடுத்தது, அமைக்கப்படும் புதிய மாகாணசபை தேர்தல் தொகுதி மீள்நிர்ணயங்களை கண்காணிப்போம்.

எமது இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணிகள், வெளியில் இருந்தபடி சும்மா எம்மை விமர்சனம் செய்துக்கொண்டு இருக்கும் வெற்றுவேட்டு நபர்களுக்கு தெரியவும் தெரியாது. விளங்கவும் விளங்காது. நாம் புதிய தேர்தல் முறைகளை உருவாக்கி, எல்லை மீள்நிர்ணயம் செய்து தொகுதிகளையும், வட்டாரங்களையும் உருவாக்கி தர அவற்றில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை சிதறடிக்க சில தேர்தல் கால காக்கை காளான்கள் இங்கே காத்திருக்கின்றன. இவற்றுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது. கொழும்பு மாநகரில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லா தொகுதிகளிலும், உங்கள் மட்டக்குளி உட்பட எல்லா வட்டாரங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதை எப்படி செய்து காட்ட வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here