இந்த நாட்டில் மலையக மக்களை புறக்கணித்து எந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வர முடியாது. அது ரணிலாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு மலையக மக்களுடைய வாக்குகள் அவசியமாகும் என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தலவாக்கலையில் 07.05.2018 அன்று நடைபெற்ற த.மு.கூட்டணியின் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக மலையக அபிவிருத்திக்கென அமைச்சு ஒன்று தேவை என்பது தொடர்பாக அழைப்பு ஒன்றை விடுக்கின்றோம். மலையக மக்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய முக்கியமான விடயங்களில் பின்னடைவை மக்கள் கண்டுள்ளனர். வடக்கு, தெற்கு, கண்டி, மேற்கு என பிரதேசவாரியாக அபிவிருத்தி அமைச்சு பதவி கொடுக்க முடியும் என்றால் மலையக அபிவிருத்திக்கு ஏன் அமைச்சு பதவி கொடுக்க முடியாது.
தெற்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீன்பிடிதுறை அமைச்சு தனியாக வழங்கமுடியுமாக இருந்தால் ஏன் மலையகத்திற்கு தேயிலை தொடர்பில் பிரதி அமைச்சு ஒன்றாவது வழங்க முடியாதா? இது தொடர்பில் நாம் அரசாங்கத்தோடு போராடியாவது பிரதி அமைச்சர் பதவியையும் எடுப்போம்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பின்னடைவு என பலரும் பேசினார்கள் ஆனால் தலவாக்கலையில் இன்று பார்க்கின்ற மக்கள் வெள்ளத்தின் ஊடாக எமக்கு முன்னேற்றமே காணப்படுகின்றது. இது மாகாண சபை தேர்தலுக்கு ஒரு அடித்தளமாக அமைக்கின்றது.
மலையக மக்களுடைய உணர்ச்சிகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். அதனூடாக அமைச்சு புனர்தானம் செய்யப்படும் இந்த நிலையில் மேலும் ஒரு பிரதி அமைச்சை மலையகத்திற்கு பெற அரசாங்கத்தோடு மேலும் போராடுவோம் என தெரிவித்தார்.
இந்த நாட்டில் இன பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வு எட்டப்பட வேண்டும். அதேபோன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். எமது இளைஞர்கள் நிம்மதியாக வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
இந்த சமயத்தில் அரசாங்கத்துக்கோர் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தோட்டப்பகுதிகளில் தேயிலைகளுக்கு கிருமிநாசினி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் தேயிலை துறையை பலப்படுத்தி மூடப்போகும் நிலை உள்ளது என தெரிவிக்கும் தோட்டப்பகுதிகளை மக்களுக்காக அபிவிருத்தியை செய்துக் கொடுக்க அரசாங்கத்தோடு போராடுவோம் என்றார்.
(க.கிஷாந்தான்)