மாலியில் பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் வரை பயணித்தனர், பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே பேருந்து ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
இதன்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது.
இந்த விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் நிலையில் அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவில் சாலை விபத்து அதிகரித்து வருவதாகவும், பொது போக்குவரத்து பேருந்துகளில் அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் பயணம் செய்வது, முறைப்படுத்துவதில் குறைபாடு போன்றவையே பேருந்து விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாலியில் கடந்த 19-ஆம் திகதியன்று பயணிகள் பேருந்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்து, 46-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவமொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே ஐ.நா. வெளியிட்டுள்ள தரவுகளின்படி உலக அளவில் உள்ள வாகனங்களில் எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே ஆபிரிக்க நாடுகளில் இருக்கின்ற நிலையில், உலகளவில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆபிரிக்காவில் நடைபெறுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.