மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் CEB இனது தீர்மானம்

0
115

மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் உண்மைகளை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அனல் மின்சாரத்தைப் பெறுவதற்கு செலவிடப்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, கட்டண திருத்த முறைக்கு முன்னர் விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கை இது என்பதால், இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் இரண்டு நாட்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டண திருத்தத்தை கட்டண திருத்த முறையின்படி இம்மாதம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு உரிமையில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மின்சார சபையை புனரமைத்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாமல் இலாபகரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்டால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவது தவிர்க்க முடியாதது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் கட்டணங்களை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here