உள்ளூராட்சிசபைத் தேர்தலை திட்டமிட்டப்படி மார்ச் 9 ஆம் திகதி நடத்துமாறும், மின் கட்டணத்தை குறைக்ககோரியும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபனால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஸ்கெலியா நகரில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், உள்ளாட்சிசபைத் தேர்தலில் புதிய லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பெரியசாமி பிரதீபன்,
” மின் கட்டண உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டெழ முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, தற்போதைய வாழ்க்கைசுமைக்கேற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 3, 500 ரூபா வழங்கப்பட வேண்டும். ” – என்றார்.
(அந்துவன்)