மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நிகழ்ந்த நிலடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது.

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, பங்களாதேஷ், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன.
மியன்மாரில் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பாங்காக்கில், இடிந்து விழுந்த உயரமான கட்டிடத்தின் இடிபாடுகளில் குறைந்தது 15 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும், இன்னும் 100 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியான்மரின் இராணுவத் தலைவர்கள் சர்வதேச உதவிக்கான வேண்டுகோளை விடுத்துள்ளனர், அதன் அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் முதலில் உதவியை அனுப்பியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் மியன்மாரில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.